தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக பகி பாலச்சந்திரன் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கட்சி ரீதியாக அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவது தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமார் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அரவிந்தகுமாரே பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டார். அவர் மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவுக்கு எதிராக அவர் செயற்பட்டதால் கூட்டணியில் இருந்தும், ம.ம.முவில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.இந்நிலையிலேயே பதுளை மாவட்டத்தில் அரவிந்தகுமாருக்கு எதிராக பகி பாலசந்திரனை மலையக மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கும் முற்போக்கு கூட்டணி களமிறக்கியுள்ளது.
தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்டுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கென ஒரு அரசியல் பணி இருக்கின்றது. வேலைத்திட்டமும் உள்ளது. மக்களுக்கு கடமையாற்ற கூடிய ஒரு பொறுப்பு உள்ளது. ஆகவே தேர்தல் என்று வரும்போது மக்கள் அதனை தீர்மானிப்பார்கள்.” -எனவும் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.










