புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்த நீர் வழங்கல் சபையினால் தற்போது 6.2 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
“மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை பாராட்டுகின்றோம். நீர் விநியோகம் என்பது மின் கட்டணத்தைச் சார்ந்து இருக்கும் துறையாகும். எனவே, நீர் கட்டணத்தை குறைக்க இந்த மின் கட்டண திருத்தம் உதவும் என நம்பப்படுகிறது.
நீர் வழங்கல் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகின்றது. மின் கட்டணம் குறைக்கப்பட்டால், நீர்க் கட்டணமும் குறைக்கப்படும் என, நாம் ஏற்கனவே உறுதியளித்தோம். தற்போது, வட்டி விகிதங்கள் 26% இல் இருந்து 11% ஆக குறைந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டு டொலரின் பெறுமதியின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது.
நீர் வழங்கல் சபைக்குத் தேவையான இரசாயனப் பொருட்களின் விலைகள், டொலரை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் கூற வேண்டும். இந்த வாரத்திற்குள் நீர்க் கட்டணத்தை எவ்வளவு குறைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய முடியும்.
2023 ஜனவரி மாதத்தில் நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்றபோது, 1000 புதிய தொடர்புகளையேனும் வழங்க முடியவில்லை. 800 மில்லியன் டொலர் கடனுடனும், சுமார் 2.8 பில்லியன் ரூபா மாதாந்த நட்டத்துடனும் நீர் வழங்கல் சபையுடனான அமைச்சு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.4.5 பில்லியன் ரூபா மாதாந்த தொடர் செலவினங்களைச் செய்யும் நீர் வழங்கல் சபையானது நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அது மாத்திரமன்றி எமது 1,000 இற்கும் குறைவான இணைப்புகளை 113,000 வரை விரிவுபடுத்தியுள்ளோம். வரும் வாரங்களில் மேலும் 30,000 இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கிறோம். நீர் வழங்கல் சபையை மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தில் இருந்து 6.2 பில்லியன் ரூபா மாதாந்த இலாபம் ஈட்டுக்கும் நிலைக்கு மாற்றியுள்ளோம். 4.5 பில்லியன் ரூபா தொடர்ச்சியான செலவீனத்துடன் எஞ்சிய தொகை கடன் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு நீர் வழங்கல் துறை நிலைபேறான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மூலம், கொள்கை அடிப்படையிலான கடனாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளோம். அதற்கு இணையாக, நீர் வழங்கல் துறைக்கும், உப வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் மறுசீரமைப்பு முன்மொழிவுகளான நீர்க் கட்டண சூத்திரம் மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு அளவுகோல்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று சபையால் அது அங்கீகரிக்கப்பட்டவுடன் மேலும் 100 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ” என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
