மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!

இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு இரு தரப்பிற்கும் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. தொடர்ந்து ஹமாஸ் மீது போரை அறிவித்த இஸ்ரேல் காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

சுமார் ஓராண்டிற்கும் மேலாக இந்த மோதல் தொடர்கிறது. இடையில் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவே அங்கு நிலைமை மேலும் மோசமானது. போர் நிறுத்தத்திற்கு ஓராண்டாக முயற்சி நடந்து வருகிறது.

இதுவரை இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்குப் பிடிகொடுக்காமலேயே இருந்து வந்தது. இருப்பினும், இப்போது ஹமாஸ் தலைவர் சின்வார், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா என இருவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை மெல்ல மாறுகிறது.

காசாவில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், அதில் இஸ்ரேல் சார்பில் அந்நாட்டு உளவு படை தலைவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல போர் நிறுத்தத்தில் உடன்பாடு ஏற்பட்டால் தாக்குதலை நிறுத்த போவதாக ஹமாஸும் அறிவித்துள்ளது.

ஹமாஸ் தரப்பு மேலும் கூறுகையில், “எகிப்து தலைநகர் கெய்ரோவில் காசா போர்நிறுத்தம் குறித்து பேசுச்வார்த்தை நடைபெறும். இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்தால் போதும்.

நாங்கள் தாக்குதலை நிறுத்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில கோரிக்கைகள் தான்.. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் வேண்டும். காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எகிப்து முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்” என்றார்.

அதேபோல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த போர் நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “காசாவில் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தத்தை எட்ட எகிப்து உதவியுள்ளது. அதற்கு நன்றி” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைவரைப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. எகிப்துடன் கத்தாரும் சமாதான முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், மெசாட் தலைவர் அங்குச் சென்று அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

Related Articles

Latest Articles