மூன்று கட்டங்களில் வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வாகனச் சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விட வேண்டும். ஏனென்றால் அதனுடன் இணைந்த தொழிற்துறையொன்றுள்ளது. அதனுடன் தொடர்புள்ள தொழில்முனைவோர் உள்ளனர். நீண்ட காலத்திற்கு வாகன சந்தையை தடுத்து வைக்க முடியாது.
அதனால் 3 கட்டங்களில் இந்த வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம். பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் விசேட தேவைகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என்பவற்றை கடந்த 14 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு ஏற்ற வகையில் திறந்து விட்டுள்ளோம். எதிர்வரும் பெப்ரவரி தொடக்கம் தனியார் வாகன இறக்குமதி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.
இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படும் என யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கியுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தி இந்த வாகன இறக்குமதியினால் வெளிச்செல்லும் டொலரின் தொகை தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். அது எந்தளவிற்கு எமது பொருளாதாரத்திற்கு தாங்கக் கூடியதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.
எமது பொருளாதாரத்தை மீளமைக்க வேண்டுமானால் இந்த வாகன சந்தையை திறந்து விட வேண்டும். அதனால் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து இந்த வாகன சந்தையை திறந்து விடுகிறோம். ஏனென்றால் இது முக்கியமானது என நாம் கருதுகிறோம்.”- என்றார்.