ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது பாடசாலை மாணவர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மற்றும் அஸ்வெசும தொடர்பில் கூறிய விடயங்கள் வருமாறு,
“பொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலதிக புத்தகங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர்.
தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். இது எந்த வகையிலும் உகந்த நிலைமையல்ல. வரவு செலவுத்திட்டத்தில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உள்ளதோடு இந்த வருட இறுதிக்குள் அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அஸ்வெசும பயனாளர்கள் தெரிவு செய்கையில் சரியாக தெரிவு நடந்ததா என்ற கேள்வி கிராமங்களில் எழுப்பப்படுகிறது. அஸ்வெசும பெற தெரிவு செய்யப்படவோ பிள்ளைக்கு பாடசாலைக் கல்விக்கான கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்படவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் அஸ்வெசும திட்டத்திற்கு உள்வாங்கப்படாத ஆனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய பிள்ளைகளை தெரிவு செய்து அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த 6000ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அடுத்து விசேடமாக அஸ்வெசும 4 கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. அதிலுள்ள 8 இலட்சம் பேர் டிசம்பர் 31 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்தில் இருந்து அகற்றப்பட இருந்தனர். அந்த 8 இலட்சம் பேருக்கும் நிவாரணம் வழங்குவதை மார்ச் 31 வரை 3 மாதத்தினால் நீடித்துள்ளோம்.
இரண்டாவது குழுவை 2025 டிசமர்பர் 31 வரை ஒருவருடத்தினால் நீடித்துள்ளோம். அதே போன்று அஸ்வெசும பெறுவோருக்கும் பெறாதோருக்கும் இடையில் கிராமங்களில் பிரச்சினை உள்ளது. இதனை மீளமைக்க வேண்டும். பழைய கட்டமைப்பின் கீழ் தான் முன்னர் மீளமைப்பு நடந்தது. அது வெற்றிகரமாக நடந்ததா என்பதை கிராமங்களில் உள்ளோர் அனுபவிக்கின்றனர்.
அந்தக் கட்டமைப்பின் ஊடாகப் பெறும் தகவல்கள், கிராம உத்தியோகஸ்தரும் சமுர்த்தி உத்தியோகஸ்தரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் சிலவேளை சமூக சேவை உத்தியோகஸ்தரின் ஒத்துழைப்புடன் மீள ஆராய்ந்து தற்பொழுது அஸ்வெசும கிடைக்காத ஆனால் நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களை மீண்டும் தெரிவு செய்து அடுத்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு அஸ்வெசும வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அதே போன்று வங்கியூடாகத்தான் அஸ்வெசும வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுவாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. 67 ஆயிரம் குடும்பங்கள் இதில் அடங்கும். அஸ்வெசும் பெற தகுதி பெற்றும் ஆனால் அந்தப் பயனைப்பெற வங்கிக் கணக்குக் கணக்கு ஆரம்பிக்க அடையாள அட்டையோ அடையாள அட்டை பெற பிறப்புச்சான்றிதழோ பெற முடியாத நிலையை அந்தக் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளன.
ஆட்சியாளர்கள் மிக நெருக்கமாக அவதானித்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் அல்லவா இவை. ஆனால் ஒன்றரை வருடங்களாக கருத்திற் கொள்ளாமல் விட்டனர்.மத்திய வங்கியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அவகாசம் வழங்க நாம் முடிவு செய்துள்ளோம்.
அதனால் அந்த அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் அந்த பயனை வழங்க நடவடிக்கை எடுப்போம். சில விடயங்களை வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். சிலவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மார்ச் 21 ஆம் திகதியளவில் வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைய இருக்கிறது. அதன் பின்னர் சட்டத்தை நிறைவேற்ற முயன்றால் இதனை ஏப்ரல் மாதம் வழங்க முடியாது போகும்.
இந்தப் பயன்களை துரிதமாக வழங்கும் வகையில் இவற்றை விரைவாக வர்த்தமானியில் வெளியிட்டு அடுத்த ஜனவரியில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் ‘வற்’ வரி திருத்தப்பட வேண்டும். அஸ்வெசும சட்டத்தில் பல திருத்தங்கள் உள்ளன. இந்தத் திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” – என்றார்.










