இந்தியாவில் தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றார். ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இதுதான் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற வித்தியாசமாகும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” கடந்த சில நாட்களாக அனைவரும் பேசுகின்ற ஒருவிடயம்தான் தமிழ்நாட்டு சேலம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழன் நடராஜன் பற்றியது. அவர் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய திறமையை சர்வதேச அரங்கில் நிரூபித்துக்கொண்டிருக்கின்றான்.
அதுமட்டுமல்லாமல் அவர் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆஸ்திரோலியா மண்ணில் இருந்து தமிழ் மொழியில் தன்னுடைய செவ்வியை வழங்குகின்றார். இதன் மூலம் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்.மேலும் எங்களில் ஒரு சிலர் கடந்த காலத்தில் கிரிக்கட்டில் சாதனை செய்திருந்தாலும் அவர்கள் எனக்கு தமிழ் தெரியாது என கூறுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம் புகட்டுவது போல நடராஜன் தமிழில் பேசி அசத்திவிட்டார்.
இன்று இலங்கையில் நடைபெறுகின்ற எல்.பி.எல் போட்டிகளில் எத்தனை தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.ஒரு சிலருக்கு மாத்திரமே.ஏன் திறமையானவர்கள் இல்லையா? திறமை இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. இது விளையாட்டில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இதே நிலைதான். அது அரசியலாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த துறையாகவும் இருக்கட்டும் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்தியாவில் ஒரு முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும். இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்பட்ட இந்திராகாந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை சார்ந்த ஒருவர் பிரதமராக வர முடியும்.இன்னும் பல சமூகத்தை சார்ந்தவர்கள் உயர் பதவியை வகிக்க முடியும்.அவர்களின் திறமைக்கு மாத்திரமே அங்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது.ஆனால் இலங்கையில் இனரீதியாகவே இவை அனைத்தும் பார்க்கப்படுகின்றது. இது ஒரு பெரும் சாபக்கேடாகும்.
இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 100 வீதம் இனத்துவேசம் பேசப்படுகின்றது. ஆனால் இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்துவதோ அல்லது சம்பந்தபட்ட அமைச்சர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.இது மிகவும் கவலைக்குறிய ஒரு செயற்பாடாகும்.
இது ஆளும் கட்சியில் மாத்திரம் அல்ல.எதிர்கட்சியில் இருக்கின்ற ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இனத்துவேசமாகவே பேசுகின்றார்கள்.இந்த விடயங்களை ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வண்மையாக கண்டிக்கின்றேன் .” – என்றுள்ளது.










