” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் கூறவில்லை. 2017 ஆம் ஆண்டு இந்திய ஆசிரியர்களை அழைத்துவருவதற்கு முயற்சித்தவேளை ஜே.வி.பியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நாம் அதனை செய்யவில்லை என்றே குறிப்பிட்டிருந்தேன்.
எனினும், நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாக விடயத்தை மாற்றி எழுதியுள்ளனர். இது தவறு.இந்த விடயத்தை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயத்துடன் எனக்கு தொடர்பு இல்லை.” – எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
அதேவேளை, இபோச பஸ்ஸிலிருந்து மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் குறித்த சம்பவத்தை வீடியோ எடுத்த மாணவன் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் கூறினார்.