“வரி குறைப்பு” வாஷிங்டனுடன் பேச தயாராகிறது கொழும்பு!

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் அந்நாட்டுடன் கலந்துரையாடப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையை மட்டும் இலக்கு வைத்து அமெரிக்கா வரி விதிக்கவில்லை. தாம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் அத்தனை நாடுகளுக்குமே இந்த பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுக்கொள்கையாகும்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கையில் 88 சதவீத வரி விதிக்கப்படுகின்றது என அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவேதான் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுக்கும் இதே அணுகுமுறைதான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கும் 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கைக்கு மட்டுமே இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு தலையீடு செய்யப்படவில்லை என பரப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. வரி விதிப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினோம். அவ்வாறு நடந்தால் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தோம்.

அமெரிக்காவின் கொள்கையை எம்மால் மாற்ற முடியாது. வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் திகதியே அமுலுக்கு வரும். எனவே, பேச்சுவார்த்தை மூலம் வரி வீதத்தை குறைத்துகொள்வதற்குரிய சாத்தியப்பாடுகள் பற்றி முயற்சிப்போம்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் எம்மால் புரிந்துணர்வுடன் செயற்பட முடியும். மாற்று வழிகள் பற்றியும் ஆராயப்படுகின்றது.

அமெரிக்காவுடன் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் வர்த்கத உறவுகளை பேணுவதற்கு முயற்சிக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles