பிள்ளையான் பிரதான சூத்திரதாரியா?

” பிரபாகரனுடனேயே மோதிய பிள்ளையானை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.” – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனினும், முயலை நரியாக காண்பிக்கும் தந்திரம் பிள்ளையான் விடயத்தல் எடுபடாது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிள்ளையானின் சட்டத்தரணியாக கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி உதய கம்மன்பில , பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடினார்.

அது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டார்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் பல தகவல்களை வெளியிட்டார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி உரையாற்றினார்.

நான் ஏப்ரல் 13 ஆம் திகதி பிள்ளையானை சந்தித்தேன். இது தொடர்பில் அவரிடம் வினவினேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் ஒரு வசனம்கூட பேசவில்லை என என்னிடம் கூறினார்.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எவ்வித தகவல்களையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை அவர் சிறையில் இருந்தார். எனவே, பிள்ளையான்தான் தாக்குதல் சம்பவத்தின் பிரதான மூளையாளி எனக் கூறுபவர்களில் மூளையை முதலில் பரிசோதிக்க வேண்டும்.

ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளிவரும் என ஜனாதிபதி கூறி இருந்தார்.
அதற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியொருவரை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, முயலை நரியாக காண்பிப்பதற்கு முற்படக்கூடும். பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்படலாம்.” எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

எனினும், பிரபாகரனுடனேயே மோதி வெற்றிபெற்றவர் என்ற அடிப்படையில் அவ்வளவு எளிதில் பிள்ளையானை பொறிக்குள் சிக்கவைத்தவிடலாம் என அரசாங்கம் கருதினால், அந்த முயற்சி கைகூடாது என கம்மன்பில மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles