தமக்கான மக்கள் ஆதரவு அலை கடுகளவேனும் குறையவில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளுங்கட்சியும், இதோ மீண்டெழுந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதான எதிர்க்கட்சிகளும் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவுள்ளன.
இதனால் மே தினமானது இலங்கையில் தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் அமையவுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் (கோல்பேஸ்) நடத்துகின்றது.
நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மேதினக் கூட்டம் எனும் தொனிப்பொருளிள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உட்பட தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.
ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்தபோது மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் மிகவும் நேர்த்தியான முறையில் நடத்தும் கட்சி என்ற பெருமையை பெற்றிருந்தது. இம்முறை ஆளுங்கட்சியில் இருந்து மே தினக் கூட்டத்தை அக்கட்சி நடத்துகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து மேதினக் கூட்டத்தையும், பேரணியையும் தலவாக்கலையில் நடத்தவுள்ளது.
‘ஏமாந்தது போதும், தற்போது விழித்தெழுவோம்” எனும் தொனிப்பொருளின்கீழ் மொட்டு கட்சி, நுகோகொடையில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியான மருதானையில் உள்ள கட்சி தலைமையகத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் மே தினக் கூட்டம் கிருளப்பனையில் நடைபெறவுள்ளது.
மே 6 ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல் என்பதால் தமக்கான பலத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் கட்சிகள் பயன்படுத்த உள்ளன. அதேபோல தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் அவை மாறவுள்ளன.
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டம் நடைபெறுகின்றது. இதனால் கொழும்பு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, கொழும்புக்கு வெளியில் நடைபெறும் பேரணி மற்றும் கூட்டங்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துவருகின்றனர்.