இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்!
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கம்பளை , தெல்பிட்டிய முதல் நுவரெலியாவரையில் வீதியில் இரு புறங்களிலும் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. அதிகளவான வளைவுகளும் உள்ளன.
இப்பள்ளங்களில் வாகனம் புரண்டு விபத்துக்குள்ளானால் உயிரிழப்புகள், படுகாயம் ஏற்படுவதை கடவுளால்கூட தடுக்க முடியாமல் போகும்.
அதிலும் குறிப்பாக கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் தவலாந்தென்ன, இறம்பொடை, கெரண்டிஎல்ல, லபுக்கலை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளங்கள் மரண பீதியை ஏற்படுத்தக்கூடியவை.
எனவே, சாரதிகள் நிதானம் – பொறுப்பு – பொதுநலன் கருதி தமது பணியை நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டும். இப்படியான வீதிகளில் அனுபவமிக்க சாரதிகளை ஈடுபடுத்த வேண்டும்.
வீதி சோதனையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தாலும், முன்னால் செல்லும் பஸ்ஸின் சாரதிகள், பின்னால் வரும் பஸ்ஸின் சாரதிக்கு பொலிஸார் எந்த இடத்தில் உள்ளனர் என்ற தகவலை வழங்கிவிடுகின்றனர். அந்த இடம்வரும்போது பொறுப்புடன் செயற்படுவார்கள். தாண்டியதும் போக்குவரத்து விதிமுறைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படுவதில்லை.
அதேபோல பொதுபோக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை பொலிஸார் பெரும்பாலும், ஏனைய வாகனங்களைபோல் பரிசோதிப்பதில்லை.
எனவே, முறையற்ற விதத்தில் தொலைபேசியை பயன்படுத்தும் சாரதிகள் பற்றியும், பொறுப்புடன் வாகனம் செலுத்தாத சாரதிகள் பற்றியும் உரிய தரப்பிடம் முறையிடும் முழு உரிமையும் பயணிகளுக்கு உள்ளது. அதேபோல எல்லை கடந்த வேகம் எனில் அது பற்றி சாரதி, நடத்துனரிடம் கேள்வி கேளுங்கள். ஏனெனில் விபத்து நடந்த பின்னர் ஒப்பாரி வைத்து அழுவதில் பயன் இல்லை. பல தடவைகள் கேள்விகளை எழுப்பி, நடுவீதியில் இறங்கியவன், இறக்கிவிடப்பட்டவன் என்ற அடிப்படையில் இந்த விடயத்தை கூறுவதற்கு எனக்கு தகுதி இருக்கும் என நம்புகின்றேன்.
அடுத்தது தனியார் பஸ் மற்றும் இபோச பஸ்சுக்கிடையிலான போட்டியென்பது அடுத்த ஆபத்து. புசல்லாவையில் இருந்து கம்பளைவரை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் பெரும்பாலான நேரங்களில் ஆமை வேகத்திலேயே செல்லும். ஆனால் இபோச பஸ்ஸை கண்டுவிட்டால் அதன் சாரதி குதிரை வேகம் எடுப்பார். அப்போது அலுங்கி, குலுங்கிதான் பயணிக்க நேரிடும். ஏனைய பகுதிகளிலும் இப்படிதான் நடக்கின்றது.
எனவே, முறையான நேர அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும். குறுந்தூர பயணத்துக்கு, நெடுந்தூர பயணத்துக்கு பயணிக்க வேண்டிய பஸ்களை அடையாளப்படுத்த வேண்டும். இது விடயத்தில் மக்களுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். ஏனெனில் இறுதி யாத்திரைக்கு நாம் அவசரப்படக்கூடாது. எல்லோருக்கும் மரணம் இருக்கின்றது என்பது இயற்கையின் நீதி.
அதற்காக ஏனையவர்களின் பொறுப்பற்ற செயல்களால் நாம் இறப்பதை அனுமதிக்ககூடாது. வாழும் உரிமை உங்களுக்கு உள்ளது. அதற்கு அச்சுறுத்தும் விதத்தில் செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் உரிமையும் உங்களுக்கு உண்டு.
சாரதிகள் வெற்றிலை, மாவா போட்டுக்கொண்டு பஸ் ஓட்டுவது, பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்புவது, பஸ்களுக்கிடையிலான போட்டி (அதிகவேகம்) , தொலைபேசி பாவனை உள்ளிட்ட காரணங்களுக்கும் பஸ் விபத்துகளுக்கு காரணங்களாகும். இவற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. அதேபோல பொலிஸாரும் (சிலர்) ‘கையூட்டல்” பெறுவதற்காக தவறை அனுமதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
பஸ்ஸின் தரம், பாவனைக்கு ஏற்ற வகையில் உள்ளதா, ( பஸ்சுக்கு வர்ணம் பூசி, அலங்காரங்களை செய்வதால் அது பயணத்துக்கு பாதுகாப்பானது எனக் கருதமுடியாது. உள்பாகங்களும் சோதிக்கப்பட வேண்டும்.) அனுமதி பத்திரம் வழங்குவது முதல் அடிக்கடி சோதனைகள் இடம்பெற வேண்டும். ஆனால் அவை இடம்பெறாமைக்கு லஞ்சம் என்பதுதான் காரணம் என்பது கசப்பான உண்மையாகும். (அரசியல் மாற்றம் என்பதுபோல அரச நிர்வாக கட்டமைப்பில் இடம்பெறும் மோசடிளை தடுப்பதற்குரிய மாற்றமும் அவசியம்.)
இப்படி பொது போக்குவரத்து கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுதல் போன்ற விடயங்களுக்கு அப்பால், நாட்டில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் அவசியம். இதனை தேசிய முக்கியத்துவம்மிக்க பிரச்சினையாகக் கருதி அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நாளொன்றுக்கு விபத்துகளால் குறைந்தபட்சம் ஆறுபேராவது பலியாகின்றனர். காயமடைபவர்களில் 50 சதவீதமானோர்வரை அங்கவீனமாகின்றனர். இந்நிலைமை தொடரக்கூடாது.
பொருளாதார மறுசீரமைப்புபோல், போக்குவரத்து மறுசீரமைப்பென்பதும் காலத்தின் கட்டாய தேவையாகும் என்பதையே கொத்மலை விபத்தும் எடுத்துக்கூறுகின்றது.
ஆர்.சனத்