” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டாரா என்பது குறித்தும், டி.என்.ஏ பரிசோதனை தொடர்பிலும் பலத்த சந்தேகம் உள்ளது. அவை தொடர்பில் சிஐடியினர் விசாரணை நடத்திவருகின்றனர்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சஹ்ரான் குழுவின் பிரபல உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரனின் எனப்படும் சாரா ஜஸ்மின் 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியது. அது தொடர்பில் இரண்டு டிஎன்ஏ பரிசோதனைகள் இடம்பெற்றன. அவை இரணடும் சாரா ஜஸ்மினின் நெருங்கிய உறவினர்களுடன் ஒத்துப்போகவில்லை.
மூன்றாவது தடவை சாரா ஜஸ்மினின் தாயுடன் அது ஒத்துப்போயுள்ளது. அப்போது சரத்வீரசேகரவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அந்த மூன்றாவது டிஎன்ஏ மாதிரி மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட முடியாது. சிஐடியினரால் அது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்.
சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டாரா இல்லையா என்பது தொடர்பிலும் சந்தேகம் உள்ளது. அது தொடர்பிலும் சிஐடியினர் விசாரித்துவருகின்றனர்.” – என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.