துறைமுகத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில கூறியவை வருமாறு,
” சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு மோசடி தொடர்பில் ஜுன் 2 ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன். தற்போது ஒன்றரை மாதம் கடந்துவிட்டது. எனினும், இந்த முறைப்பாடு விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் எமக்கு தென்டபவில்லை.
முறைப்பாட்டில் சாட்சியங்களையும் முன்வைத்திருந்தோம். எனினும், பழைய கொள்ளையர்களை பிடிப்பதில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது பிஸியாக உள்ளதுபோல் தெரிகின்றது.
சிறிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நிறுத்தவிட்டாவது, கொள்கலன் விவகாரம் பற்றி துரிதமாக விசாரணை நடத்துமாறு கோருகின்றோம்.
கொள்கலன்கள் விடுவிப்பு நடந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. துறைசார் அமைச்சர் இன்னமும் சுதந்திரமாக உள்ளார். தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக சட்டம் செயற்படாதா?” – என்றார் உதய கம்மன்பில.
