இந்திய பிரதமர் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்தே ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்படுவதில் உண்மை கிடையாது. ரணில் விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரமே அரசாங்கம் செயற்படுகின்றது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது ,
“ இந்திய பிரதமர் மோடி மற்றும் சில மேற்குலக நாடுகளின் தலைவர்களின் அழுத்தத்தின் பிரபாகரமே ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,
“அது குறித்து எனக்கு தெரியாது. எமது நாட்டு சட்டத்தை மாற்றுவதற்கு உலக தலைவர்கள் தலையிடுவார்கள் என நான் நினைக்கவில்லை. இப்படியான கருத்துகள் உலக தலைவர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
ரணில் போன்றவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் உள்ளவர்கள் நோய் ஏற்பட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது சாதாரண நடைமுறையாகும். எனினும், ரணில் , ராஜபக்சக்கள் அவ்வாறு செயற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டனர். இது விடயத்தில் நாம் சட்டப்பூர்வமாகவே செயற்படுகின்றோம். பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன சுயாதீனமாக செயற்படுகின்றன.” – என்றார் பிமல் ரத்நாயக்க.










