“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
“ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் நான் காத்திருக்கின்றேன்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே சுவிஸில் இருந்து அவசரமாக நாடு திரும்பினேன்.” எனவும் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டியதில்லை.
பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் தீர்மானித்தால் வீட்டுக்கு செல்வதற்கு நாம் தயார். நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்பு கூறுவோம்.” – என பிரதமர் மேலும் கூறினார்.
