” பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெருந்தோட்ட நிர்வாகங்கள்.;”
இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” பெருந்தோட்ட நிறுவனங்கள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தோட்டங்களின் முன் பள்ளிகளை நடத்தி வருகின்றன.
பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கும் முன்பள்ளிகளுக்கும் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தமது வேலை நேரத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்காக தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன.
முன் பள்ளிகள் சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வியை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் பாலர் கல்வி வயதை எட்டும் வரை சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அவசியமாகின்றன.
அதே நேரத்தில் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வயது வரை பிள்ளை பராபரிப்பு நிலையங்களில் இருக்க வைக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் முன் பள்ளிகளை இல்லாமலாக்கி சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குள் சிறார்களை முடக்கி வைக்க முற்படுகின்றன. இதில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.
தற்காலத்தில் ஆரம்பக் கல்விக்கு பாலர் பாடசாலைகள் மிக முக்கியமானவை. மலையக சிறுவர்கள் முன் பள்ளிகள் ஊடாக ஆரம்ப அறிவினை கொள்வதற்கு தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருக்கக் கூடாது.
அதே நேரத்தில் முன் பள்ளிகளை முகாமை செய்வதற்கு மாகாண சபைகள் மாகாண கல்வி அமைச்சுக்கு கீழ் நிறுவனங்களைக் கொண்டுள்ளன.இந்த விடயத்தை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தனியான ஆரம்பக் கல்வி பிரிவு இருக்கின்றன.
ஆனால் இவை தோட்டங்களின் இருக்கின்ற முன் பள்ளிகள் சம்பந்தமாக எவ்வித கரிசனையும் செலுத்துவதில்லை.
மாகாண சபைகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில கொடுப்பனவுகளை செய்கின்றன. அது கூட பெருந்தோட்ட பிரதேசங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை.
தோட்டங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளும் அதில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கல்வி கற்கின்ற மாணவர்களும் இந்த நாட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் போலவும் குறிப்பிட்ட தோட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் போலவும் கணிக்கப்படுகின்றனர்.
இதனால்தான் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை தோட்ட நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழுகின்ற குடும்பங்களின் தலைவிதியை தோட்ட முகாமையாளர் நிர்ணயிக்கின்ற கொடூரமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அவர்கள் பெருந்தோட்ட பயிர்களை பராமரித்து முகாமைத்துவம் செய்வதில் எந்தவிதமான தடையும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு அங்கு வாழுகின்ற மக்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது .
தோட்ட முகமைத்துவங்களின் அடாவடித்தனம் தற்போது சிறு சிறு பிரச்சனைகளாக தோன்றலாம். ஆனால் இது எதிர்காலத்தில் பூதாகரமாக மாறுகின்ற போது நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக அமையும். அரசாங்கம் தோட்ட குடியிருப்பாளர்களின் பிரச்சினை ஆழமாக ஆராய்ந்து தோட்ட குடியிருப்பு பிரதேசத்தில் தோட்ட முகாமைத்துவத்துக்கு இருக்கின்ற அதிகாரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் கொடுக்கின்ற அச்சுறுத்தலுக்கு எதிராக எதிர்வரும் 22 ஆம் திகதி அட்டனில் நடைபெறுகின்ற கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு எமது பூரணத்துவமான ஆதரவை வழங்க உள்ளோம்.
அதே நேரத்தில் மலையகத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் மலையக பாலர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற முன் பள்ளிகளை தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் நடத்திச் செல்வதற்கு தடையாக இருக்கின்ற சக்திகளுக்கு எதிராக அணி திரள வேண்டும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










