மக்களின் தோழர் நல்லகண்ணு: மகத்தான அரசியல் பயணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவரும், விடுலைப் போராட்ட வீரருமான இரா.நல்​ல​கண்​ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு இங்கே…

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று இரண்டாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.

இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 5 சகோதரிகள். வைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். அப்போதே, பாரதியார் பாடல்களை வாசிப்பதிலும், பாடுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டினார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வ.உ.சிதம்பரனார், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், திரிகூட சுந்தரம் பிள்ளை, சோமயாஜுலு, திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்கள் வைகுண்டம் பொதுக்கூட்டங்களில் பேசியதைக் கேட்டிருக்கிறார். அப்போதே தேச விடுதலைப் போரில் பங்கேற்க வேண்டும் என்பது பெரும் விருப்பமாக அவரிடம் வளரத் தொடங்கியது.

பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே, வைகுண்டம் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தின் விடுதலைப் போராட்டப் பிரச்சாரக் கூட்டங்களுக்காக மெகபோன் மூலம் பிரச்சாரம் செய்தல், கூட்டம் நடக்கும்போது பெட்ரமாக்ஸ் விளக்கை சுமந்து செல்லுதல், மேடை அமைத்தல் என நல்லகண்ணு மிகவும் ஈடுபாட்டுடன் அரசியல் பணிகளை செய்திருக்கிறார்.

வாக்களிக்கும் வயது இல்லாத நிலையில், பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே 1937இல் நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டுப் பிரச்சாரப் பணிகளில் நல்லகண்ணு ஈடுபட்டார்.

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக…

1938-ல் தூத்துக்குடியில் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அவர்களின் குடும்பங்கள் பட்டினியில் வாடியபோது, வைகுண்டத்தில் ஜீவா போன்ற தலைவர்கள் அரிசி வசூலில் ஈடுபட்டனர். நல்லகண்ணு உள்ளிட்ட பள்ளிச் சிறுவர்கள் வீடு, வீடாகச் சென்று அரிசி வசூல் செய்வதில் முன்னணியில் இருந்தனர்.

உலகப் போருக்கு ஆதரவாக காரனேஷன் பள்ளியில் நடைபெற்ற போர் பிரச்சார நாடகத்துக்கு எதிராக நல்லகண்ணு உள்ளிட்ட மாணவர்கள் முழக்கமிட்டனர். இதனால் போலீஸ் தடியடி, தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போராட்டம் என சிறுவன் நல்லகண்ணுவை அப்போதே அரசியல் போராட்டக் களத்துக்கு இழுத்து வரும் பல நிகழ்வுகள் நடைபெற்றன.

உலக மகா யுத்தத்தின்போது, அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் உணவுக் கமிட்டி ஒன்றை அரசு அமைத்தது. வைகுண்டம் கமிட்டியில் மிராசுதாரர்கள், வசதிபடைத்தவர்கள் ஆகியோருடன் பள்ளி மாணவன் நல்லகண்ணுவும், பெரிய குடும்பன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவரது நண்பரும் உறுப்பினர்களாக இருந்தனர். தங்களுக்குச் சமமாக தாழ்த்தப்பட்டவர் அமர்வதை விரும்பாத மிராசுதாரர்கள், கமிட்டிக் கூட்டத்துக்கு பெரிய குடும்பனை அழைக்காமல் தவிர்த்து வந்தனர். இதனை நல்லகண்ணு பெரும் பிரச்சினையாக்கினார்.

ஒரு கமிட்டிக் கூட்டத்துக்கு பெரிய குடும்பனை அழைத்து வந்து, மிராசுதாரர்களுக்கு இணையாக கூட்டத்தில் அமர வைத்தார். இதனால் உணவுக் கமிட்டிக் கூட்டத்தில் வசதிபடைத்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனினும், இதனைக் கண்டு கவலைப்படாத நல்லகண்ணு, உணவுப் பொருள் விநியோகம் சீராக நடப்பதை உறுதி செய்தார். இவ்வாறு, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியாகப் போராடும் பண்பு சிறு வயதிலேயே நல்லகண்ணுவிடம் உருவானது.

விடுதலைப் போராட்டத்தில்…

பள்ளி மாணவனாக நல்லகண்ணு இருந்த காலத்தில், சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, காந்தியடிகள், பகத்சிங் போன்றோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களும், அவர்களது உரைகள் அடங்கிய பிரசுரங்களும் தடை செய்யப்பட்டிருந்தன. எனினும், தடையை மீறி அவற்றையெல்லாம் நல்லகண்ணு தேடித் தேடி வாசித்தார். இந்த நூல்கள் நல்லகண்ணுவின் சிந்தனையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின.

தொடக்க காலத்தில் மார்க்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் நூல்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், ஜவஹர்லால் நேரு நூல்கள் மூலமே கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றி அறிந்து கொண்டதாகவும் நல்லகண்ணு கூறியிருக்கிறார். நல்லகண்ணுவை தேச விடுதலைப் போராட்டக் களத்துக்குக் கொண்டு வந்ததில் அவரது அண்ணன் ஆர்.முத்துராமலிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. ஆங்கிலேய அரசால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை, திருச்சி கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த ஆர்.முத்துராமலிங்கம் டைப் செய்து, பள்ளி மாணவராயிருந்த தம்பி நல்லகண்ணுவுக்கு அனுப்பி வைத்தார். நல்லகண்ணுவும், அவரது பள்ளி நண்பர்களும் இதனைப் படித்தனர். இதுவும் நல்லகண்ணுவின் விடுதலைப் போராட்டப் பணிகளுக்கு வித்திட்டது.

நல்லகண்ணுவின் நடவடிக்கைகள் அவரது தந்தையார் ராமசாமிக்கு பிடிக்காத நிலையிலும், அவரது அண்ணன் முத்துராமலிங்கம் தொடக்கத்திலிருந்தே அவரது பொதுவாழ்க்கைப் பணிகளை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். இந்ந நிலையில், நல்லகண்ணுவின் பள்ளியில் பணியாற்றிய இந்தி ஆசிரியர் பலவேசம் செட்டியார், நல்லகண்ணுவிடம் மார்க்சிய நூல்களைக் கொடுத்து வாசிக்க வைத்தார். நல்லகண்ணுவின் மனதில் மார்க்சிய சிந்தனைகளை விதைத்ததில் பலவேசம் செட்டியாருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

நெல்லைச் சந்திப்பில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.ஓ.எல். இடைநிலை வகுப்புப் (இண்டர்மீடியட்) படித்தார். அப்போது அந்தக் கல்லூரியில் பயின்ற தொ.மு.சி.ரகுநாதன் தொடர்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே வைகுண்டத்தில் ‘கலைத் தொண்டர் கழகம்’ என்ற அமைப்பை நல்லகண்ணு உருவாக்கினார். எட்டயபுரம் பாரதி மணி மண்டபம் கட்டுவதற்கு நல்லகண்ணு 70 ரூபாய் வசூல் செய்து அனுப்பி இருந்தார். அதனால் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு நல்லகண்ணுவுக்குக் கிடைத்தது. இந்த விழாவில் பாரதி பற்றி ஜீவா பேசியது நல்லகண்ணுவுக்குப் புத்துணர்ச்சி தந்தது.

 

கட்சிப் பணிகளில் தீவிரம்…

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இயங்கிய கம்யூனிஸ்டு கட்சிக் குழுவுடன் நல்லகண்ணுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. தனது பள்ளி ஆசிரியர் பலவேசம் செட்டியார் வழிகாட்டுதலில், 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1944-இல் வைகுண்டத்தில் முதன் முதலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவாக்கப்பட்டது. இந்தக் கிளையில் முத்தையா, ராமசுப்பிரமணியன், திருமூலநாதன் ஆகியோருடன் நல்லகண்ணுவும் இணைந்து, அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1945 செப்டம்பரில் மதுரையில் சென்னை மாகாண தொழிற்சங்க காங்கிரசின் (ஏஐடியுசி) மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்கும் வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்தது. இந்த மாநாட்டில் ஜீவா ஆற்றிய உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவு, நல்லகண்ணுவை அதிகம் கவர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வைத்தது.

நாங்குனேரி வட்டாரத்தில், பாலதண்டாயுதம், தளவாய், என்.வானமாமலை, என்.டி.வானமாமலை, வி.எஸ்.காந்தி போன்ற தோழர்களுடன் இணைந்து, நாங்குனேரி ஜீயர் மடம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், களக்காடு, வடமனேரி பண்ணையார் ஆகியோரை எதிர்த்து “பட்ட மரக்கால் கூடாது; முத்திரை மரக்கால் வேண்டும்; சுத்தபாரம் வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நடந்த போராட்டங்களை நல்லகண்ணு தலைமை ஏற்று நடத்தினார்.

1946 பிப்ரவரி 17 அன்று அம்பாசமுத்திரம் கோடாரங்குளம் கிராமத்தில் அம்பாசமுத்திரம தாலுகா விவசாய சங்க அமைப்பை உருவாக்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கல்லூரி மாணவராக இருந்த நல்லகண்ணுவும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாய சங்க மாவட்டக் குழுவுக்கு நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். இத்துடன் இரண்டு ஆண்டுகளிலேயே அவரது கல்லூரிப் படிப்புக்கு பாதியிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்தில் நாங்குனேரி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரை உள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை நல்லகண்ணு உருவாக்கினார். 1947ஆம் ஆண்டு நாங்குனேரி வட்டத்தின் முழுநேரக் கட்சி ஊழியரானார். 1947 ஜூலை 7ஆம் தேதி கட்சியின் மாநில மையத்துக்கு விவசாய சங்கத் தலைவர் பி.சீனிவாச ராவ் எழுதிய கடிதத்தில், “இந்தப் பிரதேசத்தில் வேலை செய்யும் நம் கிஸான் தலைவர் தோழர் நல்லகண்ணு, கிராமம் கிராமமாகக் களைப்பின்றி நடந்து, வேலைகளைக் கவனிக்கிறார். எவ்வளவு வேலை இருந்தாலும் கொஞ்சம் கூட சளைப்பதில்லை.

இவர் மாத்திரம், இன்னும் முன் கை எடுத்து தனது வேலைகளை செய்வாரேயானால், அந்த ஜில்லாவில் ஒரு தலைசிறந்த விவசாயக் கட்சித் தலைவராக விளங்க முடியும்” என்று பாராட்டி இருந்தார். இது, நல்லகண்ணு கட்சிக்கு வந்த இளம் வயதிலேயே அவரைப் பற்றி மூத்த தலைவர் சீனிவாச ராவ் மிகச் சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது.

ஜீவாவின் பரிந்துரை அடிப்படையில், சென்னையில் செயல்பட்ட ‘ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சில நாட்கள் நல்லகண்ணு பணியாற்றினார். எனினும், சென்னை மாநகர வாழ்க்கை முறை அவருக்கு ஒத்து வராததால், மீண்டும் நெல்லை மாவட்டத்துக்கே திரும்பி விவசாய சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

கொடிய முறையில் சித்ரவதை…

1948இல் இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதித்தது. இதனால் அப்போது முதல் 1949 டிசம்பர் 20 நள்ளிரவு வரை தோழர் நல்லகண்ணு தலைமறைவாக இருந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

கட்சித் தோழர்கள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், நல்லகண்ணுவை போலீஸ் தீவிரமாகத் தேடி வந்தது. இந்நிலையில், 1949 டிசம்பர் 20 அன்று நள்ளிரவில் நாங்குனேரி தாலுகா புலியூர்குறிச்சி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கட்சித் தோழர் ஒருவரின் விட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நல்லகண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

உண்மையை வரவழைப்பதற்காக நல்லகண்ணுவை கொடிய முறையில் சித்ரவதை செய்தனர். கைகளை பின்புறம் கட்டி வீதியில் இழுத்துச் சென்றனர். ஆத்திரமூட்டவும் அவமானப்படுத்தவும் செய்தனர். இதன் உச்சகட்டமாக நல்லகண்ணு வைத்திருந்த அடர்த்தியான மீசையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகரெட்டின் தீ முனையால் கொளுத்தினார். நல்லகண்ணு துடிக்கத் துடிக்க வலியால் கதறினார். அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரை மீசை வைக்கும் வழக்கத்தை விட்டொழித்தார். போலீசார் எவ்வளவு கொடூரமான முறையில் சித்ரவதை செய்த போதிலும், தோழர்கள் யாரைப் பற்றியும் எதையும் சொல்லாமல், மன உறுதியுடன் திகழ்ந்தார் நல்லகண்ணு.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த சித்ரவதைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை நாங்குனேரி சப் ஜெயிலில் அடைத்தனர். அங்கு மிகக் குறுகலான தனி லாக்-அப்பில் ஆறு மாத காலம் அவர் அடைபட்டுக் கிடந்தார். நெல்லை சதி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நல்லகண்ணு, பின்னர் கொக்கிரக்குளம் சப்-ஜெயிலுக்கும், அதன் பின்னர் மதுரை மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டார்.

நல்லகண்ணு, பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மாயாண்டி பாரதி உள்ளிட்ட 109 கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நெல்லை சதி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 1952 ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 42 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், நல்லகண்ணு உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி, நல்லகண்ணுக்கு மேலும் 5 ஆண்டுகள் கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை மத்தியச் சிறையில் அவருக்கு 9658 என்ற கைதி எண் வழங்கப்பட்டிருந்தது. கைதி எண் பொறிக்கப்பட்ட அலுமினியப் பட்டையில், அவர் விடுதலை செய்யப்பட்ட வேண்டிய வருடம் 1972 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

1952-இல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்கள். அப்போது, நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட சதி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய போராட்டங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரமாயின. வேறு வழியின்றி பெரும்பாலான சதி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் நெல்லை சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்த அனைவரும் விடுதலை ஆயினர். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கும் நல்லகண்ணு மீது இருந்ததால், மேலும் ஐந்து ஆண்டுகள் சிறையில் தண்டனைக் காலத்தை அவர் கழிக்க வேண்டியிருந்தது.

சிறை வாழ்வுக்குப் பின்…

ஏழு ஆண்டுகள் சிறை வாழ்வுக்குப் பின்னர் 1956 டிசம்பர் 13 அன்று மதுரை சிறையிலிருந்து நல்லகண்ணு விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர், முன்பை விட இன்னும் தீவிரமாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1958 ஜூலை மாதம் நல்லகண்ணு – ரஞ்சிதம் திருமணம், பேராசிரியர் நா.வானமாமலை தலைமையில் திருநெல்வேலி, சிந்துபூந்துறையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தோழர் மருதன்வாழ்வு அன்னாசாமியின் மகளான ரஞ்சிதம், அரசுப் பள்ளி ஆசிரியை ஆவார். நல்லகண்ணு தம்பதியருக்கு காசிபாரதி, ஆண்டாள் என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர்.

அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம் அணைக்கு அருகில் சுமார் பதினைந்து மைல் தூரத்தில் உற்பத்தியாகி தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கடனா நதி மீது அணை கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால் 1966 ஜூலை 24 அன்று தோழர் நல்லகண்ணு தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் முன் கடனா நதியில் அணைகட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்தப் பிரச்சினை தமிழக சட்டப் பேரவையிலும் எழுப்பப்பட்டது. மணலி கந்தசாமியை அழைத்துப் பேசிய தமிழக அரசு கடனா நதியில் அணைகட்ட முயற்சி எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால் 1966 ஆகஸ்ட் 4 அன்று தோழர் நல்லகண்ணுவும் தோழர்களும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.

1966ஆம் ஆண்டிலேயே கடனா நதியில் அணை கட்ட தமிழக அரசு அடிக்கல் நாட்டியது. இன்று கடனா நதி மீது கம்பீரமாக அணை திகழ்வதற்கும், அந்தப் பகுதி மக்கள் அணை நீரைப் பயன்படுத்துவதற்கும் தோழர் நல்லகண்ணு மேற்கொண்ட உண்ணாவிரதம் முக்கிய காரணமாகும்.

1968இல் நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் என்ற ஊரில் விவசாயிகள் மீது போலீசார் கொடிய அடக்குமுறையை ஏவினர். சீதாராம தேவர் என்ற விசவாயி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கந்தசாமி என்ற விவசாயியின் வலது கரம் வெட்டப்பட்டது. துப்பாக்கி முனையால் ஈஸ்வரக் குடும்பர் என்பவர் குத்தப்பட்டார். ஒரு பெண் விவசாயியின் காது அறுக்கப்பட்டது. இவ்வளவு கொடுமை நடந்தும் அன்றைய தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இவற்றைக் கண்டித்து 1968 டிசம்பரில் தோழர்கள் நல்லகண்ணுவும், எஸ்.ஏ.முருகானந்தமும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போதைய தலைவர்கள் ஏ.கே.சுப்பையா எம்எல்ஏ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் எம்.காத்தமுத்து, எஸ்.அழகிரிசாமி எம்எல்ஏ, ஏஐடியுசி, நெல்லை மாவட்டத் தலைவர் வீ.மீனாட்சிநாதன் ஆகியோர் அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவைச் சந்தித்து போலீசாரின் காட்டு தர்பாரையும், தோழர்களின் உண்ணாவிரதத்தையும் பற்றி விளக்கினர். தமிழக முதல்வர் தூதுக்குழுவிடம் அளித்த வாக்குறுதியை ஏற்று, 12 நாட்களுக்குப் பிறகு தோழர்கள் நல்லகண்ணுவும், எஸ்.ஏ.முருகானந்தமும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்த நல்லகண்ணு, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக 1968 முதல் 1991ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். மேலும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் 2005 ஏப்ரல் மாதம் வரை மூன்று முறை மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து 13 ஆண்டு காலம் அந்தப் பொறுப்பை வகித்திருக்கிறார். அதன் பிறகும் கூட கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் என ஏராளமான பொறுப்புகளை நல்லகண்ணு தொடர்ந்து வகித்தார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு பல ஆண்டுகள் செயல்பட்டு, ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக போராட்டங்கள், உண்ணாவிரதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளார். 1995இல் தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி கலவரங்களின்போது நல்லகண்ணுவின் மாமனாரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவருமான 84 வயது அன்னாசாமி, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். மாமனார் இறந்த துக்கத்தை விடவும், இதனால் சாதிக் கலவரம் மேலும் தீவிரமாகி விடக்கூடாதே என்று நல்லகண்ணு கவலைப்பட்டார்.

தன் மாமனாரை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் கூடாது என்று தமது உறவினர்களிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். தென்மாவட்டங்களில் ஊர் ஊராகப் பாத யாத்திரைச் சென்று மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி, கலவரத்தை அடக்கினார். மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவர்கள் பெயர் சூட்டுவது சாதி கலவரத்துக்கு காரணமாக இருப்பதாகவும், ஆகவே இந்த பெயர் வைக்கும் முறையை கைவிட வேண்டும் என்றும் இவர் வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தலைவர்கள் பெயரை நீக்கியது.

நல்லகண்ணுவின் 80வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கட்சி சார்பில் 18-10-2005 அன்று சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போதைய முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நல்லகண்ணுவின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கட்சித் தோழர்கள் வசூலித்துக் கொடுத்த ரூ.1 கோடி நிதியையும், தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் வழங்கப்பட்ட காரையும் கட்சிக்கேக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர்களாக தேர்வு செய்யப்படும் பட்டியலினத்தவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு பிற சாதியினரால் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2005 மே 19 அன்று நல்லகண்ணு தலைமையில் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

ஆர்.நல்லகண்ணு 2010ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடுத்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமே வாதாடினார். இதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தது.

ஆசிரியர் பணியில் இருந்த நல்லகண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் அம்மாள் 1996இல் பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகு, 1997இல்தான் அவர் சென்னைக்கு குடியேறினார். திருமணம் ஆனதிலிருந்து ஆளுக்கொரு ஊரில் வசித்து வந்த நல்லகண்ணு – ரஞ்சிதம் அம்மாள் தம்பதியர், அதன் பிறகுதான் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர். 2016இல் நல்லகண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட நல்லகண்ணுவின் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் இந்த விருதை நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்ச ரூபாயுடன், தனது பணம் ரூ.5,000 சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நல்லகண்ணு திரும்பி கொடுத்துவிட்டார்.

நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2024 டிசம்பர் 29 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமெரிக்கா, கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளுக்கு தோழர் நல்லகண்ணு சென்று வந்திருக்கிறார். அந்த நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவங்களை தனித்தனி நூல்களாக அவர் எழுதியிருக்கிறார் என்பது நினைவுகூர்த்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles