“டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட உள்ளங்களுக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இச்செயலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவதோடு, உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மனநல வைத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
டிக்கோயா ஆதார வைத்தியசாலைநிர்வாகத்தினர் இதற்கான போதுமான ஒத்துழைப்பை வழங்கினால்தான் பொதுமக்கள் வைத்தியசாலை நிர்வாகத்தின்மீதும் சுகாதார அமைச்சின்மீதும் நம்பிக்கை கொள்ள முடியும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாடசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் வீதிகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் போராட்டங்களை நடத்துவதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் சிறைச்சாலைகள் அல்லது மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் இத்தகைய கொடூரங்கள் வெளி உலகிற்கு எளிதில் தெரியவருவதில்லை. தெரிய வந்தாலும், சிலர் அமைதி காக்கும் நிலைப்பாட்டால் அவை மறைக்கப்படுகின்றன.
டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியசாலையில் நடந்ததாக கூறப்படும் இந்த வன்கொடுமை முதலாவது சம்பவமாக இருக்க முடியாது என்ற ஐயமும் எழுகிறது. இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். இச்செயல் குற்றமாக பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளின் தொழில் உரிமை பறிக்கப்படுவதோடு கடந்த காலச் சம்பவங்களும் தொடர்புபடுத்தி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், தனிநபர் செயலாக அல்லாமல் கூட்டாக இத்தகைய செயலில் ஈடுபடுவது மனநலப் பிரச்சினையாக மட்டுமல்ல, அநாகரிகத்தின் உச்சமாகவும் பார்க்கப்பட வேண்டும்.
அதேபோன்று, வைத்தியசாலை சவச்சாலைகளிலும் தனியார் இறுதிச் சடங்கு நிலையங்களிலும் பணியாற்றுவோர் போதைப் பொருட்களை பயன்படுத்தி பணியில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் தன்னிலை மறந்து செயல்படக்கூடும். எனவே, இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாது, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சடலங்களின் கௌரவத்தையும் உறவினர்களின் மரியாதையையும் பாதுகாக்க அரசு மற்றும் தனியார் தரப்பினர் தேவையான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
வைத்தியசாலையில் சடலத்திற்கே பாதுகாப்பு இல்லையெனில், பெண் நோயாளிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற மக்களின் கேள்வியில் நியாயம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் மட்டுமல்ல; அங்கு பணியாற்றும் அனைத்து தரப்பினரும் மனிதநேயம் கொண்ட அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான உளவள ஆலோசனைகள் மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகளை தொடர்ந்து வழங்குவது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.
இம்மாதம் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் வாழ்வுரிமை மற்றும் கௌரவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம், பல்வேறு காரணங்களால் உயிரிழந்த பெண்களினதும் மரியாதையை காக்கும் பொறுப்பை உணர வேண்டும். அதன்மூலம் மட்டுமே நாகரிகமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை கிளங்கன் சம்பவம் நினைவூட்டுகிறது.
