ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனையடுத்து அவரின் மகன் மோஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA)வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஈரானிய மக்கள் தங்கள் உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளையும் விருப்பத்தையும் நாங்கள் மதிக்கிறோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு அடித்தளங்களை அழித்து வருகின்றன. மேலும், உலகளவில் ஸ்திரமின்மையை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதுடன், அதன் சமூக அமைப்பை அழிக்கவும் முயற்சிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை உலக நாடுகள் கண்டிக்கவும், நிராகரிக்கவும் வேண்டும். ஏனெனில் இவற்றை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுத தயாரிப்பில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.










