“கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் ‘டித்வா’ புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான பொய் வாக்குறுதிகளாக அமைந்துவிடக் கூடாது” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பல வாரங்களாக நாம் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, இன்று அரசாங்கம் ஒரு நிவாரணப் பட்டியலை முன்வைத்துள்ளது. இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இவற்றின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என நாம் கூறியபோது அதனை மறுத்தவர்கள், இன்று ஜனாதிபதியின் உரை மூலம் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இந்த அரசாங்கத்தின் கீழ் மின் உற்பத்தி மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தரமற்ற நிலக்கரியால் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதை ஜனாதிபதியே இன்று சபையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தைச் சுருக்குவதன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது. உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சி ஏற்படும். தேர்தலின் போது வாக்குறுதியளித்தது போல சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சிக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்த அழுத்தம் யாரிடமிருந்து வருகின்றது என்பது தெரியவில்லை. நாம் ஒருபோதும் நாட்டு மக்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்.
அரசாங்கம் அறிவித்துள்ள 100 பில்லியன் ரூபாய் நிவாரணப் பொதியில், எரிவாயு விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முற்றாக மறக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்கள் சென்றடையாத நிலை காணப்படுகின்றது. ஒருபுறம் வட் வரியை உயர்த்திவிட்டு, மறுபுறம் சொற்ப நிவாரணங்களை வழங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
நாட்டில் தற்போது உரங்களுக்குகே கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது குறித்து அரசாங்கம் எவ்விதப் புரிதலும் இன்றி இருப்பதை ஏற்க முடியாது. விவசாயிகளின் உண்மையான நிலைமையைப் புரிந்து கொண்டு உரத் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.” – என்றார்.










