“செம்மணி விவகாரத்தில் எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. உண்மைகளை வெளிக்கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள், இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் சாட்சியங்களைப் பெறுதல் ஆகியவை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ:
“செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புக்கூடுகள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதன்கிழமை வரை அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
(மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி இன்றுடன் முடிவடைந்தது.)
அதேவேளை, இது தொடர்பான முழுமையான விவரங்கள் நீதிமன்றத்திற்கு முறைப்படி அறிக்கையிடப்படும். நீதிமன்றத்தின் வழிகாட்டல் மற்றும் உத்தரவின் பேரிலேயே சாட்சியாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதில் மறைப்பதற்கு என்று எதுவுமில்லை; உண்மையைச் சமூகமயப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.










