“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இந்தக் கூட்டத்தில், “Rebuilding Sri Lanka” திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ், “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியதுடன் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழுக்கள் மற்றும் உபகுழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது “டித்வா” சூறாவளி தொடர்பாக தயாரிக்கப்பட்ட பேரிடருக்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை (Post Disaster Needs Assessment — PDNA) , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் “Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ரசல் அபொன்சு, ஜனாதிபதி ஆலோசகர் பராக்கிரம திசாநாயக்க, PAFFREL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ஆகியோரும் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.










