ஹட்டன்,பொகவந்தலாவை பிரதான வீதியில் பயணித்த காரொன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து, கெசல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொட பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்ததோடு, காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் என மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் பலாங்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த ஆணின் சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிய பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










