சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு விசேட குழு: அமைச்சரவை முடிவு

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் உயிரிழந்தனர்.
நூற்றுக்கு மேற்பட்டோர் இச்சம்பவத்தில் காயமடைந்தனர்.

நீர்கொழும்பு, கம்பஹா, ராகம மற்றும் கொழும்பு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் சுமார் 700 பேர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெண் கைதிகளும் ஏனைய சிலரும் அங்கு
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள்ளும், வெளியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் அமையப்பெற்றுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறைச்சாலை கலவரத்தால் சிறைச்சாலை சொத்துகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles