“நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளையும் தோற்கடிக்க ஒன்றிணைவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ நாட்டில் மின்சார உற்பத்தியில் முக்கிய ஆற்றல் மூலமான நிலக்கரி இறக்குமதி செயல்பாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் பல சந்தர்ப்பங்களில் நாட்டிற்கு சுட்டிக்காட்டினோம்.
தரமற்ற கீழ்த்தரமான நிலக்கரி டெண்டர் மூலம் நடந்த இந்த முறைகேடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் நடந்த மோசடி தொடர்பாக நாம் முன்வைத்த கருக்களை அலட்சியமாக நிராகரித்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆணவத்தனமாக நடந்து கொண்டு தங்களது மோசடியை சமூகத்திடம் இருந்து மறைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடிந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட வெளிக்கொணர்வுகளுக்கு மேலதிகமாக, நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இராஜினாமா செய்தபோது வெளியிட்ட அறிக்கை மூலமும், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்பட்ட தகவல்கள் மூலமும், இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கையில் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி வெப்பமாக்கல் செயற்பாட்டால் ஏற்பட்ட நிதி நட்டம் மூலமும் இந்த ஊழல் நிறைந்த நிலக்கரி கொள்வனவின் உண்மையான நிலை நாட்டிற்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை மூலம், டெண்டர் செயல்பாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி வரை மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளும் அதன் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட நிதி நட்டமும் எவ்வளவு என்பதும் வெளிப்பட்டது.
ஆனால், அரசாங்கம் குறித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைத்தையும் நிராகரித்த நிலையில், சமீபத்தில் நிலக்கரி அவசர கொள்முதல் சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவொன்று வெளியானது நாட்டில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
குறித்த ஒலிப்பதிவு உண்மையானது என்பதை தற்போது நிலக்கரி நிறுவனத்தின் தலைவரே ஏற்றுக் கொண்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் மற்றும் அவர்களுக்கும் நிலக்கரி இடையேயான தொடர்பு பற்றி விசாரணையை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தற்சமயம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டையும் பதிவுசெய்துள்ளது.
இந்நாட்டின் பிரபல தொழில் அதிபர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உட்பட தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் இடையே காணப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் நாம் பல சந்தர்ப்பங்களில் வெளிக்கொணர்ந்துள்ளோம். இந்த நிலக்கரி கொடுக்கல் வாங்கல்களும் இதன் மற்றொரு சம்பவம் என்பது தற்போது வெளிப்பட்டவண்ணமுள்ளது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் மௌனம் காத்து வந்த அரசாங்கம், இன்று மேலும் ஒரு நாடக் கூத்தை ஆரம்பித்துள்ளது.
ஊழல் நிறைந்த அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் இராஜினாமா செய்வதன் மூலம், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் இந்த நாட்டிற்கு ஏற்படுத்திய பில்லியன் கணக்கான நட்டத்தை மக்கள் மனதிலிருந்து மூடி மறைப்பதே அந்த முயற்சியாகும்.
டெண்டர் செயல்பாட்டு முதலே நடந்த இந்த ஊழல் கொடுக்கல் வாங்கள்களுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரும், அமைச்சரவையின் பிரதானி என்ற வகையில் ஜனாதிபதியும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என்பது எமது கருத்தாகும்.
ஆயினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியைப் பாதுகாத்து தேசிய மக்கள் சக்தியின் 153 மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் மக்கள் வைத்த நம்பிக்கையை எங்கனம் உடைத்தெறிந்தார்கள் என்பதை முழு நாடும் கண்டது.
மிக ஊழல் நிறைந்த இந்த தரமற்ற நிலக்கரி கொள்முதல் மூலம் நாட்டிற்கும், மக்களின் வரிப் பணத்திற்கும் ஏற்படுத்திய நட்டத்திற்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
அவ்வாறே, இந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் எடுக்க முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகிறோம்.” – என்றுள்ளது.










