மலைவாஞ்சான்
ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில் நிலவும் கடும் சீர்கேடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளமை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எதிர்ப்புகளால், சபை அமர்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
உறுப்பினர்களின் கடும் கண்டனம்
சபை நடவடிக்கைகளைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்தனர்.
சபை அறிக்கைகளில் குளறுபடிகள்:
உரையாற்றிய இ.தொ.கா உறுப்பினரும் உபதலைவருமான சுரேன், “கடந்த சபை அறிக்கைகளில் பல தவறுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் இதைச் சுட்டிக்காட்டியும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக, திருமணமாகாத பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ‘திருமதி’ எனக் குறிப்பிட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அடிப்படைத் தவறுகளை எவ்விதம் ஏற்பது?” எனக் கேள்வியெழுப்பினார்.
நிர்வாகக் குறைபாடுகள்:
மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் லோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த பத்து மாதங்களில் நகரசபைக்குத் தேவையான எந்தவொரு பொருட்களும் கொள்வனவு செய்யப்படவில்லை. சபை மண்டபத்தில் உள்ள நாட்காட்டி இன்னும் மார்ச் மாதத்திலேயே நிற்கிறது. இதுவே இந்த நிர்வாகத்தின் நிலைமைக்குச் சிறந்த சான்றாகும். கடந்த காலங்களில் கேட்கப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லை. எனவே, இவ்வாறான அறிக்கைகளை நாம் முற்றாகப் புறக்கணிக்கிறோம்” என்றார்.
சுகாதாரச் சீர்கேடு மற்றும் முறைகேடுகள்: முன்னாள் நகரசபைத் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் பேசுகையில்,
“நகரசபையின் மலசல கூடத்தையே பயன்படுத்த முடியாத நிலையில், ஒட்டுமொத்த நகரத்தையும் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க முடியும்? இங்கு கடமையாற்றிய இரண்டு பொது சுகாதாரப் பரிசோதகர்களும் தற்போது இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் பணம் கேட்பதாகத் தகவல்கள் வருகின்றன.
தலைவருக்கு மாத்திரம் மதிப்பளிக்கும் அதிகாரிகளால் சபையை நடத்த முடியாது. நாமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். நான் எட்டு வருடங்கள் தலைவராக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன், இது நெருக்கடியான சூழல், தேவைப்படின் உதவத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
திட்டமிடல் குழுவின் செயலிழப்பு
இ.தொ.கா உறுப்பினர் எஸ். பிரபாகரன் உரையாற்றும் போது, “கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு திட்டமிடல் குழு கூடவில்லை. இதனால் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கீகாரம் கிடைக்காததால் வீடுகள், கடைகளை நிர்மாணிக்க விண்ணப்பித்த மக்கள் வங்கிக் கடன் பெற முடியாமல் பெரும் நெருக்கடியில் உள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு நிர்வாகம் பதில் கூற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தலைவரின் பதில் மற்றும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன, “கடந்த காலங்களில் எவையும் முறையாக நடைபெறவில்லை. தற்போது நாம் அவற்றை நேர்த்தியாகச் செய்ய முயற்சிக்கிறோம். இதில் சில தாமதங்கள் ஏற்படலாம். எனவே, சபை அமர்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்” என்று கேட்டுக்கொண்டார்.
எனினும், தலைவரின் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையைத் தொடர்ந்து நடத்த இடமளிக்க மறுத்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, சபை அமர்வை வருகிற 28-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நகரசபைத் தலைவர் அறிவித்தார்.
