புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் அவர் கையில் அதிநவீன துப்பாக்கியுடன் நிற்கிறார். மலை சூழ்ந்த பின்புறத்தில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுகின்றன.
இந்த புகைப்படத்துடன் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில்,
“அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.
இனிமேல் பொறுமை காக்க முடியாது. தொடர்ந்து நல்லவனாக இருக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
சில மணி நேர இடைவெளியில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ”புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. குறிப்பாக ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றவும் வியூகம் வகுக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் தரையிறங்கி அந்த நாட்டில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பறிமுதல் செய்யவும் ரகசிய திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தளபதிகள் ஜனாதிபதி ட்ரம்பிடம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளனர். இதை சுட்டிக்காட்டும் விதமாகவே புயல் வந்து கொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










