மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம் தோல்வியிலேயே முடிந்தது என ஆன்மீக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவலோகத்தில் நன்மைகள் நடப்பதற்கு மும்மூர்த்திகளின் ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கும் ‘முத்தரப்புகளின்’ சங்கமம் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
அதாவது மலையக அரசியல்வாதிகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினரும் இணைய வேண்டும். அவ்வாறு இணைந்தால் நிச்சயம் இலக்கை நோக்கி வெற்றிநடை போடலாம். இந்த முத்தரப்பைதான் இங்கு மும்மூர்த்திகள் என விளித்துள்ளேன்.
கடந்த காலங்களிலும் இத்தகைய சங்கமத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், அவை தோல்வியிலேயே முடிந்தன. கூட்டுறவு என்பது நீடிக்கவில்லை. கொள்கை வேறுபாடு, அரசியல் நலன் உள்ளிட்ட காரணங்களால் இலக்கை நோக்கிய பயணம் திசை மாறியது.
ஆனால், மலையகத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் 05-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்தில் தெளிவான இலக்கு உள்ளது; அதனை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறையும் உள்ளது. மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலை என்பதே அந்த இலக்கு. அதில் காணி உரிமை என்பது பிரதானமானது.
எனவே, மலையக மக்களுக்காக நடத்தப்படும் “நாம் நீலகாமம்” யாகம் (போராட்டம்) நிச்சயம் வெற்றியளிக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. இந்த யாகம் முழுமை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றனர்.
இலக்கிற்கான வழியைச் சிவில் அமைப்புகள் காட்டலாம். அது தொடர்பான சட்டம் இயற்றல் உள்ளிட்ட விடயங்களுக்கு அரசியல் பலம் அவசியம். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் துணை நிற்க வேண்டும். இதற்காக மக்கள் எழுப்பும் குரல் விடிவிற்கான வழியைக் காட்டும். எனவே, இந்த முத்தரப்பு “நாம் நீலகாமம்” யாகம் (போராட்டம்) நிச்சயம் மலையக மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏனெனில், தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ‘ஹட்டன் பிரகடனத்தில்’ உள்ள காணி உரிமையே இதிலும் பிரதானமானது. மலையக மக்களின் இருப்பு, அடையாளம் மற்றும் தனித்துவம் என்பன வழங்கப்பட்ட உறுதிமொழிகள். இதற்கு நாட்டின் 69 லட்சம் பேர் ஆணையளித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. வாழும் உரிமையோடு வாழ்வாதாரத்திற்குரிய காணி பற்றியும் உறுதி அளிக்கப்பட்டது.
எனவே, இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மும்முனைச் சமர் தேவைப்படுகின்றது. அது ஓர் அறவழிச் சமர். அதில் இணையும் இளைஞர்கள் ஜனநாயகப் போராளிகள். நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் உள்ளனர். பாரிய விபரீதங்கள் ஏற்பட்டால் முப்படையைக் கூடக் களமிறக்கலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில், தோட்டப் பகுதிகளுக்குப் பிரத்தியேகப் படைகளோ அல்லது கூலிப்படைகளோ தேவையில்லை. இதனை நாம் சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
அவசர நடவடிக்கையாகத் தோட்டங்களையும், தோட்டங்களைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இருந்து முதலில் விடுவிக்க வேண்டும். அதற்கான அமைச்சரவைப் பத்திரம் கூட ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதனைச் செய்துவிட்டு அடுத்தகட்டமாகக் காணி உரிமை குறித்த நடவடிக்கைகளை எடுக்கலாம்.
எனவே, இந்த நீலகாமம் யாகம் (போராட்டம்) மலையக மக்களின் நன்மைக்கும் இருப்புக்கும் அத்தியாவசியமானது; அதனை வெற்றிபெற வைப்போம். “போராடிய கையோடு காணி உரிமை கிடைத்துவிடுமா?” எனச் சிலர் கேட்கலாம். கருத்தரித்த உடனேயே குழந்தையைப் பிரசவிக்க முடியுமா? அதற்கெனக் கால எல்லை உள்ளதுதானே. வலி எனத் தெரிந்தும் குழந்தைக்காகத் தாய் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறாள் அல்லவா?
அதுபோல்தான் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான புள்ளி 5-ஆம் தேதி வைக்கப்படுகின்றது. அதனை எமது சமூகத்திற்கான விடுதலைக் கோலமாக மாற்றிக்கொள்வது எம் அனைவரினதும் கடமையாகும்.
மலையக மக்களுக்கு இதுவரைகாலமும் மறுக்கப்பட்ட உரிமைகளை வெல்வதற்குரிய காலமே இதுவென நுவரெலியாவில் நேற்று உரையாற்றுகையில் ஆளுங்கட்சி எம்.பியான கிட்ணன் செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார். அந்த உரிமைகளையே நாமும் கோரி நிற்கின்றோம்.
– ஆர்.சனத்










