செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை, மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டவற்றில் இதுவரை 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் மூன்று எலும்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான கறுப்பு நிற மண் சேகரிக்கப்பட்டு, தற்போது உலர விடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த உறுதியான தகவல்கள் அப்பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வுப் பணிகள் நடைபெறாது என்றும், ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடரும் என்றும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles