‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர!

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான ‘கம்பன் புகழ்’ விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர்.

இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுரகுமார திஸாநாயக்கவைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்தக் கௌரவத்தைக் கம்பன் கழகத்தினர் அளித்துள்ளனர்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வை தொழிலதிபர் என்.எஸ்.வாசு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது நீதியரசர் பா.சசி மகேந்திரன் தலைமையுரையையும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையும் ஆற்றினர்.

இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்தியர் ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சான்றோர் விருது பெறவேண்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நிகழ்வுக்கு வருகை தராததால் அவருக்கான விருதை அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க விழா மேடையில் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருதை இவ்வாண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு “வரலாற்றை மாற்றியவன்!” என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு.அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles