கோலாகலமாய் நிறைவடைந்த NTV CRICKET CARNIVAL – 2026!

புசல்லாவை, க/நயாபான தமிழ் வித்தியாலயத்தில் நேற்று ( 03) நடைபெற்ற “NTV CRICKET CARNIVAL – 2026 (Season 1)” துடுப்பாட்டப் போட்டி மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நிறைவடைந்தது.

பரபரப்பான இத்தொடரில் நயாபான தமிழ் வித்தியாலயம், கலைவாணி தமிழ் வித்தியாலயம், ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயம் மற்றும் டெல்டா கிழக்கு தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெருந்திரளான பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், கலைவாணி தமிழ் வித்தியாலய அணியை வீழ்த்தி, நயாபான தமிழ் வித்தியாலயம் முதலாம் பருவகாலத்தின் (Season 1) சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டது.

கலைவாணி தமிழ் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கலைநிகழ்ச்சிகளும் சிறப்பம்சங்களும்

இப்போட்டியின் விசேட அம்சமாக, நயாபான தமிழ் வித்தியாலய மாணவர்களின் கருப்பொருள் வரவேற்புப் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின.

பாடசாலைகளின் இணைப்பாடவிதானச் செயல்பாடுகளில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வை, வருகை தந்திருந்த அதிதிகள் பாராட்டி வாழ்த்தினர்.

கௌரவிக்கப்பட்ட அதிதிகள்

விழாவானது காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெற்றது:

முதல் அமர்வு:
இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும், கண்டி கல்வி வலயத்தின் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான திரு. S. தமிழ்செல்வன்
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன் பல கல்வியியலாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இரண்டாவது அமர்வு:
கம்பளை கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. R. விஜேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. N. கார்த்திக் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

மேலும், விரிவுரையாளர்கள், வளவாளர்கள், புசல்லாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அயல் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வை அலங்கரித்தனர்.

நன்றியுரை

மைதானம் நிறைந்த பார்வையாளர்களுடன் இந்த விளையாட்டுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDE), ‘Nayapanians’ பழைய மாணவர் சங்கம், அனுசரணையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தே. கணபதி
அதிபர்,
க/நயாபான தமிழ் வித்தியாலயம்,
புசல்லாவை.

Related Articles

Latest Articles