மலைவாஞ்ஞன்
மலையகப் பெண்கள் எந்தவொரு சூழலிலும் பிறரிடம் கையேந்தாத ஒரு தன்னம்பிக்கையான நிலையை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ சிகரம் (Sri Sigaram) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ, நோர்வூட், ஹட்டன் மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் உள்ள பின்தங்கிய மற்றும் இளம் பெண்களுக்குத் தையல் கலையை இலவசமாகக் கற்பித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை ஸ்ரீ சிகரம் பவுண்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக, பயிற்சி பெற்ற மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடை கண்காட்சியும், புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வும் அண்மையில் நடைபெற்றன.
மஸ்கெலியா, புளூம்பீல்ட், நோர்வூட் முருகன் ஆலயம், புளியாவத்தை மற்றும் திரேசியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“நீங்கள் அரசாங்கத்திடமோ அல்லது வேறு எவரிடமோ கையேந்தாமல் இருப்பதற்கு இந்தத் தையல் கலை ஒரு சிறந்த கருவியாக இருக்கும். இது எனது சொந்த அனுபவம். நான் யாரிடமும் கையேந்தாமல் எனது குடும்பத்தைப் பராமரித்து வருவதுடன், இன்று எத்தனையோ பேரின் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்டியாக இருக்கின்றேன். நான் சோர்ந்து விழும் நேரங்களிலெல்லாம் எனக்குத் துணிச்சலையும் தைரியத்தையும் கொடுத்தது இந்தத் தையல் கலைதான்.
ஆகவே, மலையகத்தில் கஷ்டப்படும் பெண்களுக்கு இந்த வாழ்வாதாரக் கலையைக் கொடுத்து, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். நீங்களும் இதனைக் கற்று வாழ்க்கையில் முன்னேறுவதுடன், பிறருக்கும் இக்கலையைச் சொல்லிக்கொடுத்து உதவ வேண்டும்.”
திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி
இந்நிறுவனம் இதுவரை ஹட்டன், பொகவந்தலாவ உள்ளிட்ட தோட்டப்புறப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கியுள்ளது. இதில் பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
நடைபெற்ற கண்காட்சியில் மாணவர்களால் தைக்கப்பட்ட பல்வேறு ஆடைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிர்வாகிகளின் கருத்துக்கள்
நிகழ்வில் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி குறிப்பிடுகையில், “நாம் வாக்களித்துத் தெரிவு செய்யும் பிரதிநிதிகளின் அதிகாரங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. ஆனால், வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரான்சில் வசிக்கும் அகிலா கைலைநாதன், தான் பிறந்த மண்ணின் மக்கள் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தனது சொந்த உழைப்பைக் கொண்டு இச்சேவைகளைச் செய்து வருகிறார்.
தகுதியானவர்களையும் நல்லவர்களையும் போற்றும் சமூகம் உருவானால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும்,” என்றார்.
இந்நிகழ்வுகளில் நிறுவனத்தின் பணிப்பாளர் தமயந்தி, வளவாளர் அழகுரு, தையல் பயிற்சி ஆசிரியர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பணிப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










