மலைவாஞ்சான்
ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கும் எபோஸ்லி வீதி, தற்போதைய மழைக்காலங்களில் கால்வாய்போல் மாறி வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – எபோஸ்லி பிரதான வீதியில் அமைந்துள்ள பன்மூர் பகுதியில், சுமார் 300 மீற்றர் தூரத்தைக் கொண்ட வீதிப் பகுதி கடுமையாகச் சேதமடைந்து, குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.
இதனால், இவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் நாளாந்தம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வீதி ‘காபட்’ (Carpet) இட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், பன்மூர் பகுதியில் உள்ள இந்த குறிப்பிட்ட 300 மீற்றர் பகுதி மட்டும் முறையாகப் புனரமைக்கப்படவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, வீதியின் பல இடங்களில் பாரிய குழிகள் உருவாகியுள்ளன. அத்துடன், வடிகால்களில் வழிந்தோட வேண்டிய மழைநீர், முறையாகக் கால்வாய்கள் இன்மையால் நேரடியாக வீதியின் ஊடாகவே பாய்ந்து செல்கின்றது.
இதனால் வீதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறி, கால்வாய் போன்ற தோற்றத்தை அளிப்பதுடன், பாதசாரிகள் நடந்து செல்லக் கூட முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களே மூடிய ஆபத்தான குழி:
வீதியின் நடுப்பகுதியில் காணப்பட்ட ஆபத்தான குழி குறித்து, பலமுறை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குத் கொண்டு சென்றபோதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில், இப்பகுதி பொதுமக்களே ஒன்றிணைந்து கற்களைக் கொண்டு வந்து அக்குழியைத் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
எனினும், குறிப்பிட்ட அந்தப் பகுதி தொடர்ந்து கீழ்நோக்கித் தாழிறங்கும் (Sinking) அபாயத்தில் காணப்படுவதால், எந்த நேரத்திலும் பாரிய விபத்துக்கள் சம்பவிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் போக்குவரத்துச் சேவைகள்:
இவ்வீதியின் ஊடாக எபோஸ்லி, குரங்குமலை மற்றும் மால்பரோ ஆகிய பகுதிகளுக்கு நாளாந்தம் சுமார் ஐந்து தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. வீதியின் இந்த மோசமான நிலைமை காரணமாகப் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் வாகனங்களைச் செலுத்த முடியாமல் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக நாளாந்தம் இந்த வீதியைப் பயன்படுத்தும் நோயாளர்கள் எனப் பலரும் இந்த மழைக்காலத்தில் சொல்லொணாத் துயரங்களை அநுபவித்து வருகின்றனர்.
எனவே, இப்பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வுகளை வழங்காது, நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் (RDA) சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளும் உடனடியாகக் கவனம் செலுத்தி, சேதமடைந்த வீதிப் பகுதியைச் சீரமைக்க முன்வர வேண்டும் எனப் பிரதேச மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
