கம்பளை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி (ஆட்டோ) சாரதி ஒருவர், கடமையில் இருந்த காவல்துறை திகாரியைத் தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில், வாகனங்கள் நிறுத்தத் தடைசெய்யப்பட்ட (No Parking) பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை பொலிஸ் அதிகாரி தட்டிக்கேட்டுள்ளார். அத்துடன், அந்தச் சாரதியிடம் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கோரியபோது, அதனை வழங்க மறுத்த அந்த நபர் வன்முறையான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
அவ்விடத்தில் இருந்து அவர் முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி கட்டளையிட்டதையும் பொருட்படுத்தாமல், அவர் மீது முச்சக்கரவண்டியை மோதித் தள்ளியவாறு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
பொதுமக்களையே அதிரவைத்துள்ள இச்சம்பவம் குறித்து கம்பளைப் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
க.யோகா
