மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் கட்டாயம் நடத்துமாறு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிரணிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
எதிரணிகள் இணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜிஎல் பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்ன உள்ளிட்டோரும், முன்னாள் எம்.பிக்களான சுமந்திரன்,
லசந்த அழகியவன்ன, சமன் ரத்ன பிரிய, வடிவேல் சுரேஸ் உள்ளிட்டவர்களும் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அரசியல் பிரதிநிதிகள், இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினர்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என ஜே.வி.பி. செயலாளர் கூறியது ஜனநாயக விரோதம் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,
“ மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு கிடையாது. எனவே, தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்தை உடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் ஓருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.” – என்று குறிப்பிட்டார்.
