ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.8 கோடியை எட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் மதிப்பிட்டுள்ளது.
population clock கணிப்பின்படி, 2025 ஜூலை 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியளவில் ஆஸ்திரேலியா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த வளர்ச்சி விகிதத்தின்படி, ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 1 நிமிடம் 15 வினாடிக்கும் ஒரு நபர் மக்கள் தொகையில் இணைந்து கொள்கிறார் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு நிகர வெளிநாட்டு புலம்பெயர்வு (net overseas migration) முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 செப்டம்பர் வரையிலான ஒரு வருடத்தில், நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பில் 73 சதவீதம் (3,11,000 பேர்) வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களால் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இயற்கை அதிகரிப்பு — அதாவது பிறப்புகளுக்கும் இறப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு — 27 சதவீதமாக (1,12,600 பேர்) மட்டுமே காணப்படுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த லிஸ் ஆலன் (Liz Allen) கூறுகையில், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் குடியேற்றம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாத புள்ளிவிவரங்களின்படி, 2025 செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.6 சதவீதமாகக் காணப்பட்டது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த வளர்ச்சி விகிதம் சீராகவே இருந்துள்ளதாக ABS இன் புள்ளிவிவரப் பணிப்பாளர் பெய்டார் சோ (Beidar Cho) தெரிவித்துள்ளார்.
“இந்த 1.6 சதவீத வளர்ச்சி என்பது சமீபத்திய ஆண்டுகளை விட சற்று குறைவானதே” என்று குறிப்பிட்ட அவர், “கோவிட் பெருந்தொற்றின் போது எல்லைகள் மூடப்பட்டதும், பின்னர் அவை மீண்டும் திறக்கப்பட்ட போது வெளிநாட்டு குடியேற்றம் உச்சத்தை தொட்டதுமே இதற்குக் காரணம்.
இதனால் கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாக இருந்தது, தற்போது மீண்டும் அது வருடாந்தம் 1.6 சதவீதம் என்ற இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது,” என்றார்.
மாநில வாரியான மக்கள் தொகை வளர்ச்சி
மேற்கு ஆஸ்திரேலியா: 2.2 சதவீத வளர்ச்சியுடன் (சுமார் 66,000 பேர்) மிக வேகமான மக்கள் தொகை பெருக்கத்தைப் பதிவு செய்துள்ளது.
விக்டோரியா & குயின்ஸ்லாந்து: இரண்டு மாநிலங்களும் தலா 1.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளன. விக்டோரியாவில் 1,22,000 பேரும், குயின்ஸ்லாந்தில் 97,300 பேரும் அதிகரித்துள்ளனர்.
வடக்கு பிராந்தியம் (Northern Territory): 1.4 சதவீத வளர்ச்சி (3,700 பேர்).
ஆஸ்திரேலிய தலைநகர் பிராந்தியம் (ACT): 1.3 சதவீத வளர்ச்சி (6,500 பேர்).
தெற்கு ஆஸ்திரேலியா: 1.1 சதவீத வளர்ச்சி (21,100 பேர்).
டாஸ்மேனியா: மிகக் குறைந்த அளவாக 0.3 சதவீத வளர்ச்சியை மட்டுமே (1,700 பேர்) பதிவு செய்துள்ளது.
பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி:
கடந்த அக்டோபர் மாதம் வெளியான கருவுறுதல் விகிதம் (fertility rates) குறித்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிற்கு சராசரியாக 1.48 குழந்தைகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதமே பதிவாகியுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டின் 1.5 வீதத்தை விடக் குறைவானதாகும்.
ஆஸ்திரேலியாவின் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (2026 Census) வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










