தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இணையும் எவ்வித திட்டமும் தனக்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி பெறவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாட்டை தோற்றுவிக்கும் திட்டம் சிலருக்கு இருக்கலாம்.அதனால் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்துடன் இணைய மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.
நாட்டுக்காக நான் சேவை செய்வேன். நாட்டை மீட்கவே அரசியலுக்கு வந்தேன். எனது குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது அல்ல.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை ரணில் விக்கிரமசிங்க என்னை அமைச்சரவைக்கு அழைத்தார்.
ஆனால் நான் செல்லவில்லை. நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். அதற்குரிய சட்டமூலங்களைக் கொண்டுவருவதில் நிதி பற்றிய குழுவின் தலைவர் என்ற வகையில் பொறுப்புடன் செயல்பட்டுள்ளேன்.
எதிரணியில் இருக்கவே மக்கள் ஆணை வழங்கினர். அதற்கமைய நான் செயல்படுவேன். எமது கட்சிக்கென வேலைத்திட்டம் ஒன்று உள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் நியமிக்கப்பட உள்ளேன் எனவும் வெளியாகும் தகவலும் உண்மை இல்லை.” – என்றார்.










