திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல – நமுனுகுல – பசறை (B/113) வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (2026 ஜூன் 08, திங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்ட கடுமையான போக்குவரத்து சிரமங்களுக்கு நிலையான தீர்வு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
254.65 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், குறித்த வீதியின் 3.28 கிலோமீட்டர் மிக மோசமாக சேதமடைந்த பகுதி முழுமையாக காப்பெட் செய்து புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பணிஆறு மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தொடங்கும் இந்த திட்டம் 2026 டிசம்பர் 05 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ் மற்றும் பசறை பிரதேச சபை தலைவர் ரொஷான் பியசேன ஆகியோரின் தலைமையில் இன்று (2026 ஜூன் 08) காலை 10.00 மணிக்கு 10 ஆம் கட்டை சந்திக்கு நடைபெற்றது.
இந்த சாலை மேம்பாடு, பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எல்ல மற்றும் நமுனுகுல பகுதிகளுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அந்த பிரதேசத்தின் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.










