“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை நான் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அவருடன் விரிவாகப் பேசியிருக்கின்றேன். இவரின் மறியல் விவகாரம் மற்றும் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்கனவே எழுத்து மூலமான அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
நாளை முதல் நான்கு நாள்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடக்கவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான நேரத்தையும் கோரியுள்ளோம். இந்தச் சந்திப்பின் போது, சங்கீத்ஷனின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் மிக முக்கியமாகப் பேசவுள்ளோம். பொதுமன்னிப்பின் அடிப்படையிலாவது அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக வலியுறுத்துவோம்.
சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் சாதாரண நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் மூலம் அவருக்குப் பிணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சட்டச் சூழல் நிலவுகின்றது. அவர் பிணையில் வெளிவர வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்றம் சென்றே அதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இது மிகவும் காலதாமதத்தை ஏற்படுத்தும்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் கருணையின் கீழ் சங்கீத்ஷனின் விடுதலை தொடர்பில் உடனடியாக இறுதி முடிவை மேற்கொள்ள முடியும். இதற்காகவே நான் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆகவே, அவரை விடுதலை செய்வதற்கான முழுமையான சட்ட முயற்சிகளையும் தற்போதைய அரசு முன்னெடுத்து, அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.










