வரலாற்று சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

” இந்தியா இலங்கைக்கு வழங்கிய மாறாத நட்பு, அத்துடன் உங்களது தனிப்பட்ட தலையீடு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.”

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பிள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,

” இந்தியக் குடியரசு வரலாற்றில், தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டு மிக நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றமைக்காக, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மைல்கல்லானது, உங்களது பதவிக்காலம் பற்றிய ஒரு அறிக்கை மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்களது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதியையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

இந்தியா போன்ற பரந்த, பன்முகத்தன்மை மற்றும் பரவலான ஜனநாயகக் கட்டமைப்புள்ள ஒரு நாட்டில், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ச்சியாக மக்கள் ஆணையை வெல்ல முடிவது குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும்.

இது உங்களது தனித்துவமான ஆட்சித்திறன், சாதாரண மக்களின் வாழ்வில் உணரக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை மற்றும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் நிறைந்த இரு காலகட்டங்களிலும் பொதுமக்களின் நம்பிக்கையை வென்று அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உங்களது ஆளுமையை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது.

உங்களது ஆட்சிக்காலத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தினை அடைந்துள்ளது.

உட்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் தொடர்புகள், அரச சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்.

உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளையில், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு குரலாக உருவெடுப்பதிலும் வெற்றியடைந்துள்ளது.

உங்களது தலைமையின் கீழ், இந்தியா உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தனது இலக்குகளை நோக்கிப் பயணித்துள்ளது.

பொருளாதார ரீதியாக முன்னேற்றகரமான இந்தியா பற்றிய உங்களது தொலைநோக்குப் பார்வை, இலங்கை உட்பட உங்களது எல்லைகளுக்கு அப்பாலுள்ள பல நாடுகளையும் ஊக்குவிப்பதில் வெற்றியடைந்துள்ளது.

இந்த பரிமாற்றக் காலகட்டத்தில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றக் கிடைத்தமையை இலங்கை பெற்ற ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன்.

உங்களது மூன்று பதவிக்காலங்கள் முழுவதும், பரஸ்பர நம்பிக்கை, பூகோள ரீதியான நெருக்கம், ஆழமான நாகரிகத் தொடர்புகள் மற்றும் மக்களின் செழுமைக்கான எமது பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்களிப்பு ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது.

சவாலான காலப்பகுதிகளில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய மாறாத நட்பு, அத்துடன் உங்களது தனிப்பட்ட தலையீடு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

இந்தியா பெரும் செழுமையையும் வெற்றியையும் நோக்கி அயராது பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், எமது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உறவின் போக்கை முன்னொருபோதும் இல்லாத அடிப்படையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Related Articles

Latest Articles