மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் இன்னிங்ஸில் கமில் மிஷார மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் அதிரடி அரைச்சதங்கள் வலு சேர்த்தன.

கமில் மிஷார 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், தசுன் ஷானக 24 பந்துகளில் 58 ஓட்டங்களையும் விளாசினர்.

இவர்கள் இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 101 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார் ஜோசப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, 195 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்திலேயே தடுமாறியது.

ஆரம்ப ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியபோது, ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ரோவ்மன் பவல் ஜோடி 82 ஓட்டங்களை பகிர்ந்து அணியை மீட்டெடுத்தது.

இருப்பினும், போட்டியின் 10வது ஓவரில் ஆட்டம் இலங்கை அணியின் பக்கம் திரும்பியது. ஹெட்மையர் (36) ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கேப்டன் ரோவ்மன் பவல் 43 ஓட்டங்களுடன் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களை வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரின் பந்துவீச்சு மிரட்டியது.

13வது ஓவரில் ஹசரங்க அடுத்தடுத்த பந்துகளில் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (14) மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக நடந்த ஒருநாள் (ODI) போட்டித் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles