“வீழ்ச்சியடையும் நாட்டை இந்த குழுவே (கூட்டு எதிரணி) மீள கட்டியெழுப்பி சரியான திசைக்கு கொண்டுவரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிரணி கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“டித்வா சூறாவளி வந்து பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் கொழும்பில் இருந்து இன்னும் கண்டிக்கு ரயிலில் வரமுடியவில்லை. கம்பளையில் உள்ளவர்களுக்கு கண்டிக்கு செல்ல முடியவில்லை. குறுகிய தூரத்தைக்கூட இவர்களால் புனரமைக்க முடியாதுள்ளது. இப்படியானவர்கள்தான் நாட்டை கட்டியெழுப்புவது பற்றி கதைக்கின்றனர்.
யார் எப்படியான கதைகளைக் கூறினாலும், இந்நாட்டை சரியான திசைக்கு கொண்டுசெல்வதற்குரிய இயலுமைமிக்கவர்கள் கூட்டு எதிரணி பக்கம்தான் உள்ளனர்.
இந்நாட்டுக்காக சேவை செய்தவர்களே இன்று இந்த மேடையில் இருக்கின்றனர். நாட்டுக்காகவே கூட்டு எதிரணியாக செயல்படுகின்றோம்.
சரியான முடிவை எடுப்போம், இல்லையேல் சிக்கலில் மாட்ட வேண்டிவரும் என நாம் 2024 ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டினோம். இன்று அவ்வாறு நடக்கின்றது.
எம்மிடையே தலைமைத்துவ பிரச்சினை கிடையாது. நாட்டுக்கான பொது மேடையே இது. இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான களம்.
வீழ்ச்சியடையும் நாட்டை இந்த குழுவே மீள கட்டியெழுப்பும் என்ற உறுதிமொழியை வழங்குகின்றேன்.” – என்றார்.










