தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புதிய பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14ஆம் திகதி) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்பிகே (RPK) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான, மஸ்கெலியா – நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபானதோட்டத்தின் வாழமலைப் பிரிவில் இந்தத் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது.
நவீன வசதிகளுடன் கடந்த 1969ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தின் காரணமாக எரிந்து சேதமடைந்தது.
இந்தத் தீ பரவல் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், தளபாடங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை என்பன எரிந்து சாம்பலாகின.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தோட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, தீ விபத்துக்காகக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், தோட்ட நிர்வாகத்தின் நிதியையும் இணைத்து, இத்தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இவ்விழாவில் சமயப் பெரியவர்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கி, அடிக்கல் நாட்டுவதற்கான ஆன்மீகக் கிரியைகளை முறைப்படி நடத்தினர்.
இந்நிகழ்வில் தோட்டப் பொது முகாமையாளர், உதவி முகாமையாளர்கள், தொழிற்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
