ஒரே தோட்டம், ஒரே வேலை: மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான இன ரீதியான வேதனச் சுரண்டல் அம்பலம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேதனம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதில் 1,550 ரூபா அடிப்படை வேதனமாகவும், 200 ரூபா அரசாங்கத்தின் நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த 200 ரூபா அரசாங்க நிதியுதவி மற்றும் மொத்த வேதன உயர்வுத் திட்டம் என்பன பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தென் மாகாணத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த உயர்வு சட்டப்பூர்வமாகப் பொருந்தாது என்பதால், அவர்கள் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 1,350 ரூபா குறைந்தபட்ச வேதனத்திற்கே உரித்துடையவர்களாக உள்ளனர்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அண்மைக்கால ஆய்வின்படி, தென் மாகாணத் தனியார் தோட்டங்களில் ஒரே பணியைச் செய்யும் தொழிலாளர்களிடையே இன அடிப்படையில் வேதனப் பாரபட்சம் நிலவுகிறது
இங்குள்ள மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,100 ரூபா மட்டுமே வேதனமாக வழங்கப்படுகிறது.
அதே தோட்டங்களில் பணிபுரியும் சிங்களத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபா வரை வேதனமும், மேலதிகமாகத் தேநீர் மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
சிங்களத் தொழிலாளர்களுக்குச் சொந்த வீடுகள் இருப்பதால், அவர்கள் வேலையை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பயம் நிர்வாகத்திற்கு உள்ளது.
ஆனால், தோட்ட இருப்பிடங்களிலேயே தங்கியிருக்கும் தமிழ் தொழிலாளர்கள் எங்கும் செல்ல முடியாது என்ற பலவீனத்தை கொண்டு மலையகத் தமிழ் தொழிலாளர்கள் இந்த சுரண்டலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தகவல்: சர்வதேச மன்னிப்புச்சபை
நன்றி ஊடகவியலாளர் – ச. பிரசன்னா
