இலங்கை கடற்படைக்குசெயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது அமெரிக்கா

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் Dr.S. Paul Kapur ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வரவேற்றார்.

நிகழ்வில் உரையாற்றிய Dr.S. Paul Kapur,

“உலகின் மிகப் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக விளங்கும் பிராந்தியத்தில் கடல்சார் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் வழங்கவுள்ளதாக அறிவித்தார்.

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது.

அமெரிக்காவின் மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இயங்கும் Fleet Broadband அமைப்பு, கப்பல்களுக்கு இடையிலும் கப்பல்களுக்கும் கரையோர நிலையங்களுக்கும் இடையிலும் பாதுகாப்பான தொடர்பாடலை மேட்கொள்ள உதவும்.

இதன் மூலம், கரையோர தொடர்பாடல் எல்லைகளுக்கு அப்பாலும் செயற்படும் போது நம்பகமான குரல், தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.

மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) செயற்படும் கடற்படை தலைமையகம், விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு இடையில் நிகழ்நேர இணைப்பை இந்த அமைப்பு வழங்கும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், இந்த மேம்பட்ட தொடர்பாடல் திறனின் அறிமுகம் இலங்கையின் கடல்சார் பரப்பளவு விழிப்புணர்வை (Maritime Domain Awareness) குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதோடு, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வர்த்தகப் பாதைகளில் இடம்பெறும் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை கடற்படை வகிக்கும் முக்கிய பங்கினை அவர் சுட்டிக்காட்டினார்.

Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பு, கடற்படையின் முழுக் கப்பற் படையணியிலும் இடையறாத தொடர்பாடலைப் பேணுவதற்கும், இலங்கையின் கடல்சார் பரப்பளவில் நிகழ்நேர சூழ்நிலை விழிப்புணர்வை நிலைநிறுத்துவதற்கும், பிராந்திய பங்குதாரர்களுடன் தகவல்களை துரிதமாகப் பகிர்ந்துகொள்வதற்கும் பெரிதும் உதவும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான மேம்பட்ட திறன்கள், சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த பதிலளிப்பை வலுப்படுத்துவதோடு, சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளின் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் Chargé d’Affaires, Ms. Jayne Howell, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலறும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Latest Articles