அல்ஜீரியா அணி அபார வெற்றி

உலகக்கிண்ண தொடரில் ஆரம்பப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-0 எனத் தோல்வியடைந்த அல்ஜீரியா, நேற்றைய போட்டியில் ஜோர்டான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மீண்டுவந்துள்ளது.

மாற்று வீரராகக் களம் புகுந்த நாதிர் பென்புவாலி மற்றும் அமீன் குயிரி ஆகியோரின் அதிரடிப் பின்பாதி கோல்களின் உதவியுடன் இந்த வெற்றி சாத்தியமானது.

இந்தத் தோல்வியின் மூலம், உலகக் கிண்ணத் தொடருக்கு முதன்முறையாகத் தகுதிபெற்றிருந்த ஜோர்டான் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில், ஜோர்டான் அணியின் நிசார் அல்-ரஷ்தான் முதல் கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், பிற்பாதியில் அல்ஜீரியாவின் பென்புவாலி தலையால் முட்டி (Header) கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

தொடர்ந்து, ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்தபோது ஏற்பட்ட ஒரு கோல்முனைத் தடுமாற்றத்தைப் (Goalmouth scramble) பயன்படுத்தி அமீன் குயிரி அல்ஜீரியாவின் வெற்றிக் கோலை அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம், ‘குழு J’ பிரிவில் அல்ஜீரியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை மிசோரியின் கேன்சாஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் அல்ஜீரியா மோதவுள்ளது.

அதேவேளையில், ஜோர்டான் அணி தனது அடுத்த போட்டியில் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது.

Related Articles

Latest Articles