2025 நவம்பர் 27 அன்று இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளிப் பேரழிவினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தற்போதைய நிவாரண நடவடிக்கை கள் குறித்து பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கலகம ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கருத்து தெரிவித்த அவர், இச்சூறாவளி பேரழிவு காரணமாக பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 96,667 நபர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த மேலாண்மைப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனர்த்தத்தின் ஆரம்பக் கட்டத்தில், ஆபத்தான பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் நபர்களைத் தற்காலிகமாகத் தங்கவைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 183 பாதுகாப்பு மையங்கள் அவசரமாகச் செயற்படுத்தப்பட்டிருந்தன.
தற்போது மாவட்டத்தின் நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வரும் நிலையில், ஆரம்பத்தில் செயற்பாட்டில் இருந்த 183 பாதுகாப்பு மையங்களில் தற்போது 13 மையங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த எஞ்சிய மையங்களுக்குள் இன்னும் 272 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, பஸ்ஸர, வெலிமடை மற்றும் ஊவா பரணகம ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தற்காலிகக் கூடாரங்களிலும் இன்னும் சில மக்கள் தங்கியுள்ளனர். இந்த அனைத்துக் குழுக்களையும் ஒன்றாக இணைக்கும் போது, மொத்தம் 386 குடும்பங்கள் இன்னும் பாதுகாப்பு மையங்களிலும் தற்காலிகத் தங்கவிடங்களிலும் தவித்து வருவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற இடங்கள் மற்றும் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ள இந்த 386 குடும்பங்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக இடைக்கால இடைத்தங்கல் வீடுகளை (Transitional Houses) அமைத்துக் கொடுக்குமாறு கௌரவ ஜனாதிபதி அவர்கள் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்கமைய, தற்போது அதற்கான கட்டுமானப் பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணியினால் (Corps of Engineer Services) மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அமைத்து முடிக்கும் நோக்குடன் போர்க்கාල அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு ருகின்றன.
செலவு மற்றும் நிதி: இத்தகைய ஓர் இடைத்தங்கல் வீட்டை அமைப்பதற்காக 7,12,000 ரூபா நிதி செலவிடப்படுவதுடன், இதற்கான அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது. அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) தனது பங்களிப்பாக லூணுகலை பிரதேச செயலகப் பிரிவின் கல்லுல்ல மற்றும் மஹதோவ ஆகிய இரண்டு இடங்களிலும் ஏற்கனவே 24 இடைத்தங்கல் வீடுகளைக் கட்டி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடப்பட்ட 386 இடைத்தங்கல் வீடுகளும் பதுளை, பஸ்ஸர, லூணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, எல்ல, சொரணாதோட்ட, ஹாலி-எல மற்றும் ஹபுத்தலை ஆகிய ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை, அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் தனியாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்வதற்கான தற்காலிகத் தீர்வை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இக்குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைத்து அவர்கள் இந்த இடைத்தங்கல் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், வெற்றிடமாகும் இந்த வீடுகள் அந்தந்தப் பகுதிகளின் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், எதிர்காலத்தில் ஏதேனும் அவசர அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்படும் குடும்பங்களைத் தற்காலிகமாகத் தங்கவைப்பதற்கும் இந்த இடங்களை நிரந்தரமாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுனில் கலகம மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர்-
இராஜரத்தினம் சுரேஷ்குமார்










