அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த இயற்பியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் நுவரெலியாவில் உள்ள தங்குமிடமொன்றில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நுவரெலியா பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாசவால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சம்பிக்க ஜயசுந்தர, அவருடைய மனைவியான நெத்மி அமாயா ரத்நாயக்க மற்றும் இந்த கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஜயசிங்க ரஜித சாலிய சமரசிங்க ஆகியோருக்கே இவ்வாறு தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர், அவரது மனைவி ஆகியோர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். அதன்பின்னர் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி – லங்காதீப
ரஞ்சித் ராஜபக்ச
