2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரங்கேறிவருகின்றன.
அனல் பறக்கும் ஆட்டம், இரும்பு கோட்டை தடுப்பு என கால்பந்தாட்டத்துக்கே உரித்தான வியூகங்களுடன், சவால்களை எதிர்கொண்டு எந்த அணி கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இதய துடிப்பை எகிற வைத்துள்ளது.
இந்த உலகக்கோப்பையின் வடிவம் முந்தைய தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முதன்முறையாக 48 அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 12 குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இவற்றுடன், ஒவ்வொரு குழுவிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகளில் சிறந்த 8 அணிகளும் , ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதி பெறும். இதுவே இந்தத் தொடரின் உச்சக்கட்ட திருப்பமாகும்.
மேலும், சமமான புள்ளிகளைப் பெறும் அணிகளின் தரவரிசையைத் தீர்மானிக்க, கோல் வித்தியாசத்திற்குப் பதிலாக நேருக்கு நேர் (head-to-head) மோதிய முடிவுகளுக்கே FIFA முதன்முறையாக முன்னுரிமை அளித்துள்ளது.
இந்த அதிரடி விதிமுறை மாற்றம், இந்த தொடரை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
உலகக்கிண்ண தொடரை நடந்தும் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இது அந்நாட்டு மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக நாக்-அவுட் சுற்றை உறுதி செய்தது.
கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த ஜெர்மனி, இம்முறை பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல்களுடன் கம்பீரமாக அடுத்த சுற்றை எட்டியுள்ளது.
பிரான்ஸ் அணியும், பலம் வாய்ந்த பிரேசில் அணியும் தங்களது குழுக்களில் முதலிடம் பிடித்து அடுத்த கட்டத்திற்குள் சீறிப்பாய்ந்துள்ளன.
இவர்களுடன் கொலம்பியா, சுவிட்சர்லாந்து, மொராக்கோ மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.
தென்னாப்பிரிக்கா அணி, உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.
வெற்றி பெற்ற அணிகளின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பல நட்சத்திர அணிகளின் உலகக்கோப்பைக் கனவு லீக் சுற்றுடன் பரிதாபமாக முடிவுக்கு வந்துள்ளது.
2022 இல் உலகக்கோப்பையை நடத்திய கத்தார் அணி, இம்முறை ஒரேயொரு புள்ளியுடன் தனது குழுவில் கடைசி இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துருக்கி, லீக் போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் விடைபெற்றது.
இதேபோல், ஆப்பிரிக்க நாடான துனிசியா, அறிமுக அணியான ஜோர்டான், பனாமா மற்றும் குராசோ ஆகிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் கண்ணீருடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.
பரபரப்பான லீக் சுற்றுகள் ஜூன் 27 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், நாக்-அவுட் போர்கள் ஜூன் 28 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை அரங்கேறவுள்ளன.
வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு நகரும், தோற்கும் அணி மூட்டையைக் கட்டிக்கொண்டு உடனடியாக ஊர் திரும்ப வேண்டும்.
ஜூலை 19 ஆம் திகதி நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியை நோக்கி உலகக்கோப்பை மகுடத்தைச் சூடப்போகும் அந்தப் பலசாலி யார் என்ற விவாதம் இப்போதே உலகமெங்கும் பரபரப்பாக பேசப்படுகின்றது.










