‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறோம்’

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை வருமாறு

நமது நாட்டின் கீர்த்தியையும் பெருமையையும் முன்னிறுத்தி, உலக அமைதிக்காக மிகவும் முக்கியமானதொரு கடமைக்காக நீங்கள் புறப்படத் தயாராக இருக்கிறீர்கள். இந்த கடமைக்காக நீங்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வது நமது நாட்டின் பெருமையைத் தோள்களில் சுமந்து கொண்டே என்பதை நாம் நம்புகிறோம்.

எப்போதும் உங்கள் கடமையின் போது நாட்டின் கௌரவத்தையும் பெருமையையும் பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நமது நாட்டை சர்வதேச ரீதியில் மிகவும் கீர்த்திமிக்க, பெருமைமிக்க ஒரு நாடாக மாற்ற வேண்டும்.

நம்மால் உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமாக இருக்கலாம். ஆனால், நம்மால் உலகின் பெருமைமிக்க ஒரு நாடாக மாற முடியும். அதற்காக நம்மால் முன்னெடுக்கப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

அங்கு பொருளாதார ரீதியாக நிலையான ஒரு அரசை நாம் உருவாக்க வேண்டும். ஒரு நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த பிறகு, அந்த நாட்டைப் பற்றிய கௌரவம், பெருமை மற்றும் கீர்த்தி சர்வதேச ரீதியாக வீழ்ச்சியடைகிறது.

நாம் கடனைச் செலுத்த முடியாத ஒரு நாடாக இருந்தால், பொருளாதார ரீதியாக வங்குரோத்தான நாடாக இருந்தால், நமது பெருமை சிதைந்த ஒரு அரசாக நாம் மாறிவிடுவோம். எனவே, பொருளாதார ரீதியாக நமது நாட்டை எவ்வாறு வலுவானதொரு அரசாக மாற்றுவது என்பது நமது சவால்களில் ஒன்றாக அமைகிறது.

இன்று நாம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளோம். நமது நாட்டுக்குள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, தொற்றுநோய்கள் போன்ற உள்நாட்டு அதிர்ச்சிகளுக்கு நமது பொருளாதாரம் தாக்குப் பிடிக்கக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலத்தில் மிகக் கடுமையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவான ‘டித்வா’ சூறாவளி கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் காலப்பகுதியில் ஏற்பட்டது.

அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை. ஆனால், அந்த உள்நாட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடிய திறன்கொண்ட ஒரு பொருளாதாரம் நம்மிடம் இருந்தது. அதனால்தான், புதிதாகப் பணத்தை அச்சிடாமலும், கடன்களைப் பெறாமலும், ‘டித்வா’ சூறாவளியில் இருந்து மீண்டும் மீண்டெழுவதற்காக 50,000 கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு நமக்கு சாத்தியமானது. அதன் விளைவாக, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய காலாண்டில் நமது பொருளாதாரம் தளம்பலின்றி 5.1% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியது.

அதேபோல், மத்திய கிழக்கு யுத்த நிலைமையுடன், நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்தம்பித்துவிடும் என்று சிலர் கூறத் தொடங்கினர். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், மின்வெட்டு ஏற்படும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், வாகன இறக்குமதி நிறுத்தப்படும் போன்ற பெருமளவிலான காரணிகள் விவாதத்திற்கு உள்ளாகின. மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாம் 10,000 கோடி ரூபாயை ஒதுக்கினோம்.

உள்நாட்டு ரீதியாக ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு பொருளாதாரத்தை நாம் தற்போது கட்டியெழுப்பியுள்ளோம். அதேபோன்று, வெளிவாரியாக ஏற்படும் அதிர்ச்சிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? அதற்காக ஒரு மூலோபாயத் திட்டம் அவசியமாகிறது. அது குறித்து விரிவாகக் கலந்துரையாடி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஒரு நாடு பெருமைமிக்க நாடாக மாறுவதற்கு சட்டத்தின் ஆட்சி முறையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனவே, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கருத்தாக்கத்திற்கு நாம் உயிர் கொடுக்கிறோம். ஒரு தவறு நடக்கும் போது, அனைவருக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஏற்பட வேண்டும்.

சர்வதேச ரீதியாக இலங்கை சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற எண்ணக்கரு உருவாக வேண்டும். அந்தப் பணியில் நாம் ஒரு நீண்ட படியை எடுத்து வைத்துள்ளோம் என்பதுடன், சட்டம் அனைவருக்கும் பொதுவான ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்பி வருகிறோம்.

அதேபோன்று மக்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. ஆட்சியாளருக்கு அடிபணிந்து ஒரு நாடால் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியாளரைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. அத்தகைய சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். உலகிற்கு முன்னால் ஒரு பெருமைமிக்க, புகழ்பெற்ற நாடாக முன்னோக்கிச் செல்வதில் அது ஒரு முக்கியமான பணியாகும்.

இந்த இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் நமது நாட்டிற்காக நீண்டகால சிறந்த சேவையை ஆற்றியுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அந்தச் சேவை குறித்து சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டு ரீதியாகவும் ஓரளவிற்கு சந்தேகத்திற்குரிய இடங்கள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும் சாதாரண இராணுவச் சிப்பாய் முதல் இராணுவத் தளபதி வரையிலும், பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் மா அதிபர் வரையிலும் இந்நாட்டின் பாதுகாப்புக்காக, மக்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுத்திருந்தால், அந்த ஒவ்வொரு நடவடிக்கையையும் பாதுகாப்பதற்கு ஒரு அரசாங்கமாக நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

யாரேனும், எங்கேனும் நாட்டின் பாதுகாப்புக்காக, மக்களின் சுதந்திரத்துக்காக, நாட்டின் பாதுகாப்புக்காகப் பணிகளை ஆற்றியிருந்தால், அந்தப் பணிகளுக்குத் தோள் கொடுத்த அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், அதே சமயம் இராணுவத்தின் கீர்த்தியை புறந்தள்ளி, இராணுவத்தின் பொறுப்புகளையும் புறந்தள்ளி, சில சிறிய குழுக்களின் அதிகாரத் தேவைகளுக்காக இராணுவத்திற்குப் பொருத்தமற்ற, எதிர்பார்க்காத காரியங்களைச் செய்திருந்தால், இராணுவத்தின் கீர்த்தி, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பெருமைக்காக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயாராக உள்ளோம்.

இது தனிப்பட்ட பழிவாங்கல்களோ அல்லது தனிப்பட்ட முறையில் பின்தொடர்வதோ அல்ல. ஏதேனும் ஒரு குழுவின் அதிகாரத் தேவைகளுக்காக இராணுவத்தின் கௌரவம், மதிப்பு, நாடு மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்பைக் கைவிட்டுச் செயற்பட்டிருந்தால், இராணுவத்தின் கௌரவத்திற்காகவும் கீர்த்திக்காகவும் அதனைப் புலனாய்வு செய்து, விசாரித்து சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே நமது கௌரவம் தங்கியுள்ளது. நடந்த குற்றங்களை மணலுக்குள் மூடி புதைப்பதன் மூலம் அல்ல.

இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது மிகவும் முக்கியமான ஒரு கடமைக்காக ஆகும். ஒருபுறம் அது நமது நாட்டிற்குப் பெருமையையும் கீர்த்தியையும் தேடித்தருகிறது. ஹைட்டி அரசில் ஏற்பட்டுள்ள மோதல்களைத் தணித்து, அங்குள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, ஒரு தேர்தலின் ஊடாக அந்த மக்கள் தங்களுக்கான வலுவான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். இன்று அவர்கள் ஒரு உள்நாட்டுப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

எனவே, அந்த நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட வேண்டியுள்ளது. அதனால், நீங்கள் இன்று புறப்பட்டுச் செல்வது மற்றொரு நாட்டின் பிரஜைகளின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே ஆகும். அது ஒரு நாடாக நமக்கு பெருமையளிக்கிறது.

மற்றொரு நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரம், ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்காக நீங்கள் புறப்பட்டுச் செல்கிறீர்கள். அது ஒரு நாடாக நாம் பெறும் கௌரவமும் பெருமையுமாகும். உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும், பாதிப்புக்குள்ளான மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயாராக உள்ள ஒரு இராணுவம் இலங்கையிடம் உள்ளது என்பதை நீங்கள் உலகிற்கு உணர்த்துகிறீர்கள்.

அதேபோல், இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கீர்த்தியைப் பெற்றுள்ளது. இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது, நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் மிகவும் ஒழுக்கத்துடன் தனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றிய ஒரு நாட்டின் கௌரவத்தை முன்னிறுத்தியே ஆகும்.

கடந்த காலத்தில் இந்த சேவையில் ஈடுபட்டிருந்த குழுக்கள் அந்தப் பகுதிகளில் அந்த கௌரவத்தைப் பாதுகாத்துள்ளன. நீங்கள் நாட்டின் கௌரவத்தை மட்டுமல்லாது, சிரேஷ்ட அதிகாரிகளின் கௌரவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

நாட்டின் பெருமை, உங்கள் சிரேஷ்ட அதிகாரிகளின் கௌரவம் மற்றும் உங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெற்றோர் தனது பிள்ளையை ஒழுக்கமான ஒரு பணிக்கு அனுப்பியுள்ளனர். நீங்கள் அணிந்திருக்கும் இந்த சீருடை நமது நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. அதையிட்டு உங்கள் பெற்றோர் பெருமையடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.

அதேபோல், இலங்கை மண்ணில் ஏற்பட்ட போரின் போதும், ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் உங்களது பங்களிப்பு அளப்பரியதாகும். இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்லாது, ஏற்படும் மோதல்களின் போது கூட நாம் உங்கள் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

நாட்டில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்திலிருந்தும் மீள்வதற்காகத் தனது கடமையைச் செய்யும் ஒரு பிள்ளையை இந்தப் பெற்றோர் நாட்டுக்குத் தந்துள்ளார்கள். அதேபோல், இன்று நீங்கள் வேறொரு நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகப் புறப்பட்டுச் செல்கிறீர்கள். அதைக் குறித்தும் உங்கள் பெற்றோரிடம் பெரும் கௌரவம் உள்ளது. எனவே, நீங்கள் புறப்பட்டுச் செல்லும் இந்தச் சந்தர்ப்பம், உங்கள் மீது நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் கௌரவத்தையும் பெருமையையும் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகும்.

நீங்கள் நமது தேசியக் கொடியைத் தோள்களில் சுமந்தவாறே செல்கிறீர்கள். உங்களது கடமையின் ஒவ்வொரு படியிலும் தாய்நாடும் பெற்றோரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உங்களது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவதற்கு நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்றிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் Jayne Howell, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அமைதிகாக்கும் படை சேவைக்காகப் புறப்பட்டுச் செல்லும் உறுப்பினர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles